இலங்கை டி20 தொடர்: சஞ்சு சாம்சன் விலகல்: பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர் சேர்ப்பு

இலங்கை அணிக்கு எதிராக நடந்து வரும் டி20 தொடரில் இருந்து இந்திய அணியின் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் காயம் காரணமாக விலகியுள்ளார்.

அவருக்குப் பதிலாக பஞ்சாப் கிங்ஸ் அணியின் விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் ஜிதேஷ் ஷர்மா சேர்க்கப்பட்டுள்ளார். சர்வதேச டி20 தொடரில் ஜிதேஷ் ஷர்மா முதல்முறையாக அறிமுகமாகிறார். இந்திய அணியில் இன்று காலை ஜிதேஷ் ஷர்மா இணைவார் எனத் தெரிகிறது.

இலங்கைக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. முதல் ஆட்டத்தில் இந்திய அணி வென்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இதற்கிடையே முதல் ஆட்டத்தின்போது 13-வது ஓவரில் டீப் தேர்டு திசையில் சென்ற பந்தை தடுக்க முயன்றபோது சாம்சனுக்கு கால் முழங்காலில் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அவர் உடனடியாக வெளியேறினார். இந்தப் போட்டியில் சாம்சன் 2 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெறச் செய்தார்.

சஞ்சு சாம்சனுக்கு முழங்காலில் காயத்தின் தீவிரம் அதிகமாக இருப்பதையடுத்து அடுத்துவரும் 2 ஆட்டங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பில், “சஞ்சு சாம்சனுக்கு இடது முழங்காலில் பவுண்டரிக்கு சென்ற பந்தை பிடிக்க முயன்றபோது காயம் ஏற்பட்டது. சாம்சனின் கால் பகுதியை பிசிசிஐ மருத்துவக் குழு ஸ்கே செய்து பார்க்க வேண்டியுள்ளது,

ஆதலால், சாம்சனுக்கு அடுத்துவரும் போட்டிகளில் ஓய்வு அளிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சாம்சனுக்குப் பதிலாக பஞ்சாப் கிங்ஸ் விக்கெட் கீப்பர் ஜிதேஷ் ஷர்மா சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த ஐபிஎல் சீசனில் ஜிதேஷ் ஷர்மா 12 போட்டிகளில் 234 ரன்கள் சேர்த்திருந்தார், ஸ்ட்ரைக் ரேட் 163.63 ஆக இருந்தது.

பெரும்பாலும் பினிஷர் ரோலில் ஜிதேஷ் ஷர்மா விளையாடுவார், 16 வீரர்களை பஞ்சாப் அணிதக்கவைத்ததில் ஜிதேஷ் ஷர்மாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2022ம் ஆண்டு நடந்த சயத் முஷ்டாக் அலி தொடரிலும் ஜிதேஷ் ஷர்மா 224 ரன்கள் சேர்த்து 175 ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தார். சாம்சனுக்கு காயம் ஏற்பட்டுள்ளதையடுத்து, புனேயில் நடக்கும் ஆட்டத்தில் அவருக்குப் பதிலாக ராகுல் திரிபாதி களமிறங்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது