தலையிட்ட ஓ.பன்னீர் செல்வம்… செய்தியாளர்களிடம் வருத்தம் தெரிவித்த திமுக அமைச்சர்

பொன்முடி

செய்தியாளர்களிடம் ஒருமையில் பேசிய விவகாரத்தில், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வருத்தம் தெரிவித்தார்.

விழுப்புரம் மேலமங்கலம் கிராமத்தில் கொரோனா தடுப்பூசி முகாமை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார். அப்போது அங்கிருந்த செய்தியாளர்கள் தமிழக அரசின் பத்திரிகையாளர்களுக்கான 5 ஆயிரம் ஊக்கத்தொகை கிராம செய்தியாளர்களுக்கும் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அப்போது பொன்முடி, அவர்களிடம் ஒருமையில் பேசியதாக தெரிகிறது.

தடுப்பூசி முகாமில் அமைச்சர் பொன்முடி

பொன்முடியின் இந்த பேச்சுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் முகநூலில் கண்டனம் தெரிவித்தார். இதனையடுத்து இந்த விவகாரம் பெரிதாகுவதை உணர்ந்த அமைச்சர் பொன்முடி, தான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக பொன்முடி கூறியதாவது:

ஓ.பி.எஸ்.

என்னுடைய பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இதை அரசியலாக்க வேண்டாம். ஆனால் சிலர் அரசியல் ஆதாயம் தேட முயல்கின்றனர். நான் செய்தியாளர்களை தவறாக பேசவில்லை. அப்படி யாருடைய மனதாவது புண்படுத்தும் வகையில் பேசியிருந்தால் அதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.