லாரி ஓட்டுநரிடம் கத்தி முனையில் வழிப்பறி; 3 ரவுடிகள் கைது

சென்னை, கொடுங்கையூர் பகுதியில் லாரி ஓட்டுநரிடம், கத்திமுனையில் வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
 
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிரஞ்சீவி (21). இவர், சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.

சிரஞ்சீவி லாரியில் கடந்த 11ம் தேதி அதிகாலை கொடுங்கையூர், மூலக்கடை, ஜிஎன்டி சாலை வழியாக சென்று கொண்டிருந்தார்.
 
அப்போது, அந்த வழியாக வந்த 4 பேர் சிரஞ்சீவியின் லாரியை வழிமறித்து, அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம், செல்போனை பறித்துச் சென்றனர்.

இது குறித்து சிரஞ்சீவி, கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் வழிப்பறியில் ஈடுபட்டது மாதவரத்தைச் சேர்ந்த மகேஷ் (எ) அப்பு (30), அவரது கூட்டாளிகள் கொடுங்கையூர் ஜெயச்சந்திரன் (28), பெரம்பூர் கருணாகரன் (21) என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார்  வியாழக்கிழமை கைது செய்தனர்.