குழந்தைகளில் 45% பேருக்கு இரட்டை இலக்க எண் தெரியவில்லை: டெல்லியில் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி

தலைநகர் டெல்லியில் தெற்கு மற்றும் தென் கிழக்குப் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் குழந்தைகளில் 45 சதவீதம் பேருக்கு இரட்டை இலக்க எண் (2 டிஜிட் நம்பர்) தெரியவில்லை, 25 சதவீதம் பேருக்கு எண்களே தெரியவில்லை என்று ஆய்வில் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி குழந்தைகள் உரிமை ஆணையம் மற்றும் குழந்தைகள் நல அமைப்புகள் சேர்ந்து கரோனா காலத்தில் குழந்தைகளின் கல்வி குறித்து ஆய்வு நடத்தின. இந்த ஆய்வில் 6 முதல் 18 வயது வரை உள்ள பிரிவினரிடமும் ஆய்வு நடத்தப்பட்டது, ஆனால், பெரும்பாலும் 12 முதல் 15 வயதுள்ள குழந்தைகளிடம் தான் ஆய்வு செய்யப்பட்டது. தென், தென்கிழக்கு டெல்லியில் உள்ள குடியிருப்புகளில் உள்ள 400 குழந்தைகளிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 100 குழந்தைகள் டெல்லியில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் படிப்பவர்கள், மூன்றில் ஒரு பங்கு தென், தென்கிழக்கு டெல்லியில் படிப்பவர்கள்.

டெல்லி குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் அனுராக் குந்து ஆய்வு குறித்துக் கூறுகையில், “கொரோனா காலத்தில் குழந்தைகளின் கல்வி குறித்து தென், தென்கிழக்கு டெல்லியில் ஆய்வு நடத்தினோம். இதில் 25 சதவீதக் குழந்தைகளுக்கு கணிதத்தில் எண்கள் குறித்த அடையாளமே தெரியவில்லை, 45 சதவீதம் குழந்தைகளுக்கு கணிதத்தில் இரட்டை இலக்க எண் எதுவென்று கேட்டால் தெரியவில்லை. இந்த ஆய்வின் நோக்கம், குழந்தைகளின் அடிப்படைக் கல்வியை பலப்படுத்துதல், கணிதத்திறமையை மேம்படுத்துதலாகும். கல்வியில் பலவீனமான குழந்தைகளுக்கு அதற்கான பயிற்சியைத் தொடங்கிவிட்டோம்.

இந்த ஆய்வு மற்றும் பிரச்சாரத்தின் நோக்கம் குழந்தைகள் 100 சதவீதம் இந்தி மொழியை சரளமாகப் படிக்க வேண்டும், கணித்தில் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் போன்ற அடிப்படையை தடையின்றி கற்க வேண்டும் என்பதாகும். இவ்வாறு அனுராக் தெரிவித்தார்.