நடிகை சாந்தினி புகார் விவகாரம் மாஜி அமைச்சர் முன் ஜாமீன் தள்ளுபடி,கைது செய்து விசாரிக்க போலீசார் முடிவு

நடிகை சாந்தினியுடன் குடும்பம் நடத்தி கருக்கலைப்பு செய்த புகாரில் சிக்கிய அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி ஆனதால் போலீசார் கைது செய்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

அதிமுக ஆட்சியில், தகவல் தொழில் நுட்ப அமைச்சராக இருந்தவர் மணிகண்டன். இவர் மீது நடிகை சாந்தினி புகார் ஒன்றை கொடுத்தார். அதில் 5 ஆண்டு குடும்பம் நடத்தி, மூன்று முறை கருக்கலைப்பு செய்து  தற்போது மணிகண்டன் என்னை மிரட்டுகிறார் என கூறியிருந்தார். இதற்கு முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மறுப்பு தெரிவித்தார். பணம் பறிக்கவே என் மீது பொய் குற்றச்சாட்டுகளை கூறுகிறார் என்றார். நடிகை சாந்தினி புகார் தொடர்பாக அடையாறு மகளிர் காவல் நிலையத்தில், பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

இதற்கிடையில், மணிகண்டன் முன் ஜாமீன் கேட்டு, உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஜூன் 9ம் தேதி வரையில் மணிகண்டனை கைது செய்ய கூடாது என உத்தரவிடப்பட்டன. இந்த நிலையில் நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. மணிகண்டனுக்கு ஆஜரான வக்கீல் ஜான் சத்தியன் மனுதாரர் விசாரணைக்கு ஒத்துழைப்பார் என வாதிட்டு, முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்றார். ஆனால் அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் முனியப்ப ராஜ், முன் ஜாமீனுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து மணிகண்டனின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த நிலையில் மணிகண்டனின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி ஆனதால் முறைப்படி சம்மன் அனுப்பி விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். அதில் ஆஜராகமால் போனால் மணிகண்டனை கைது செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.