விஜய்க்கு வில்லனாகும் செல்வராகவன்

நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடித்து வரும் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்தது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார். கொரோனா 2-வது அலையின் தீவிரம் குறைந்தவுடன், சென்னையில் 2-ம் கட்டப் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

‘தளபதி 65’ என்று அழைக்கப்படும் இப்படத்தில் விஜய்யுடன் நடிக்கவுள்ள நடிகர்கள் குறித்த தகவல்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அவ்வப் போது வெளியிட்டு வருகிறது, அந்த வகையில் பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் வில்லனாக இயக்குநர் செல்வராகவன் நடிக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

ஆனால் இத்தகவல் குறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப் பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லையென்றாலும் செல்வராகவனிடம் பேச்சுவார்த்தை நடப்பதாகக் கூறப்படுகிறது.

தற்போது ‘சாணி காயிதம்’ திரைப்படத்தில் செல்வராகவன் முதல் முறையாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.