பிளஸ் டூ மாணவி தற்கொலை; ஏன் போலீசார் தீவிர விசாரணை..!

அபிராமபுரம், மே.14-  பொதுத்தேர்வு  இருந்த நேரத்தில், பிளஸ் டூ மாணவி திடீரென தற்கொலை செய்துக்கொண்டது ஏன் என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை, மயிலாப்பூர், விசாலாட்சி தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சந்திர காந்தன் (48). இவர், கார் மெக்கானிக், இவரின் மனைவி கவுரி(38). இந்த தம்பதியின் மூன்றாவது மகள் ஹேமாவதி (18). இவர், அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில், பிளஸ் டூ படித்து வந்தார்.

கடந்த 5ம் தேதி முதல் 12ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு துவங்கியது. ஹேமாவதி தமிழ், ஆங்கிலம், கணிணி அறிவியல் ஆகிய மூன்று தேர்வுகள் எழுதி முடித்தார். நேற்று வேதியியல் தேர்வு நடந்தது. ஆனால், ஹேமாவதி திடீரென தற்கொலை செய்துக்கொண்டார்.

இந்த நிலையில் நேற்று முன் தினம் மதியம்,  தாய் கவுரி, இரண்டாவது மகளுடன், சேத்துப்பட்டில் வசிக்கும், அவரின் தந்தை வீட்டிற்கு சென்றார்.

வேதியியல் தேர்வு உள்ளது, வீட்டில் உட்கார்ந்து படி என ஹேமாவதியிடம் கூறிவிட்டு தான் தாய் கவுரி சென்றிருந்தார்.

மாலை நேரத்தில், வீட்டிற்கு காஸ் சிலிண்டர் வந்தது. உள்பக்கமாக வீடு பூட்டப்பட்டிருந்தது. இதனால், சந்திரகாந்தனுக்கு டெலிவிரி நபர், மொபைல் போனில் தொடர்ப்க்கொண்டு தகவலை தெரிவித்தார். ஹேமாவதிக்கு தொடர்பு கொண்டபோது, அவர் மொபைல் போனை எடுக்கவில்லை.

தகவல் கிடைத்து, கவுரி, வேலைக்கு சென்றிருந்த சந்திரகாந்தன் ஆகியோர் வீட்டிற்கு வந்தனர்.

அங்கு, வீட்டின் உள்ள ஒரு அறையில், ஹேமாவதி தூக்கில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்து, பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

புகாரின் பேரில், அபிராமபுரம் போலீசார் விரைந்து வந்து, ஹேமாவதியின் உடலை கைப்பற்றி, விசாரணை நடத்தினர். வேதியியல் பாடம் சரியாக படிக்காததால், தேர்வு பயத்தில் அவர் தற்கொலை செய்துக்கொண்டாரா ? என ஹேமாவதியின் மொபைல் போனையும் கைப்பற்றி விசாரிக்கின்றனர்.