எஸ்பிஐ வங்கி அதிரடி: டெபாசிட்களுக்கான வட்டியை 90 பிபிஎஸ் வரை உயர்த்தியது

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி, மிகப்பெரிய அளவிலான டெபாசிட்கள் அதாவது ரூ.2 கோடிஅதற்கு அதிகமான டெபாசிட்களுக்கான வட்டியை 40 முதல் 90 பிபிஎஸ் வரை உயர்த்தியுள்ளது.

இந்த வட்டி உயர்வு நேற்று முதல் (மே-10ம்தேதி) அமலுக்கு வந்துள்ளது. பஜாஜ் பைனான்ஸ் நிறுவனமும் நிரந்தர வைப்புத் தொகைகளுக்கான வட்டியை 10பிபிஎஸ் வரை உயர்த்தியுள்ளது.

நாட்டில் உயர்ந்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டி வீதத்தை கடந்த 4 ஆண்டுகளுக்குப்பின் கடந்த வாரம் 40 புள்ளிகள் உயர்த்தி, 4.40 ஆக அதிகரித்தது.

இதைத் தொடர்ந்து பல்வேறு வங்கிகளும் டெபாசிட்களுக்கான வட்டியையும், கடனுக்கான வட்டியையும் உயர்த்தி வருகின்றன.
இதன்படி எஸ்பிஐ வங்கி, ரூ.2 கோடி மற்றும அதற்கு அதிகமான டெபாசிட்களுக்கான வட்டியை 90 புள்ளிகள்வரை உயர்த்தி நேற்று அறிவித்துள்ளது.

இதன்படி 5 முதல் 10 ஆண்டுகள், 3 ஆண்டு மற்றும்5 ஆண்டுக்கு குறையாமல் வைப்புத்தொகை இருந்தால், 90 புள்ளிகள்வரை உயர்வுடன் பட்டி வழங்கப்படும். இதற்கு முன் 3.60 சதவீதமாக இருந்தவட்டி 4.50 சதவீதமாக உயர்ந்துள்ளது.

மிகப்பெரிய தொகையை 2 ஆண்டுகள் அல்லது 3 ஆண்டுகளுக்கு குறைவில்லாமல் டெபாசிட் செய்தால் 65 புள்ளிகள் உயர்த்தப்பட்டு 4.25 சதவீதம் வட்டி வழங்கப்படும், இதற்கு முன் 3.60 சதவீதம் வட்டி வழங்கப்பட்டது.

46 நாட்கள் முதல் 179 நாட்கள்வரையிலும், 180 முதல் 210 நாட்கள் வரை மிகப்பெரிய தொகையை டெபாசிட் செய்தால் வட்டி 3.50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

211 நாட்களுக்கு குறைவில்லாமல் டெபாசிட் செய்தால் 3.75 சதவீதம் வட்டி வழங்கப்படும். இதுகுறித்து எஸ்பிஐ வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில் “ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட் வீதத்தை உயர்த்தியதால், பெருந்தொகை டெபாசிட்களுக்கான வட்டியையும் உயர்த்தியுள்ளோம்.

இதன் மூலம் குறிப்பிட்ட காலத்துக்குள் பணப்புழக்கம் குறையத் தொடங்கும்” எனத் தெரிவித்தார். எஸ்பிஐ வங்கியின் எம்எல்சிஆர் வீதமும் 10 புள்ளிகள் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எஸ்பிஐ வங்கி தரவிர, பந்தன் வங்கி, கோடக் மகிந்திரா வங்கி, ஜனா சிறுநிதி வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஆகியவையும்வைப்புத் தொகைகளுக்கான வட்டி வீதத்தை உயர்த்தியுள்ளன.

பஜாஜ் பைனான்ஸ் ரூ.5 கோடி வரையிலான வைப்புத் தொகைகளுக்கான வட்டியில் 10 புள்ளிகள் வரைஉயர்த்தியுள்ளது. இது மே10ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.