குவியலாக உடல்களால் அதிர்ச்சி! அமெரிக்காவில் கன்டெய்னரில் 46 சடலங்கள் கண்டுபிடிப்பு

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் சான் அன்டோனியோ நகரில் கன்டெய்னரில் குவியல் குவியலாக சடலங்கள் இன்று கண்டுபிடிக்கப்பட்டதால் போலீஸார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த கன்டெய்னரில் 45-க்கும் மேற்பட்ட சடலங்கள் இருக்கலாம். இவர்கள் அகதிகளாக வந்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.

சான்டியானோ நகரின் தென் மேற்கில் உள்ள குயின்டானா சாலையில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமாக சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கன்டெய்னர் லாரியை சோதனையிட்டனர்.

அந்த கன்டெய்னரைத் திறந்து பார்த்தபோது, கூட்டம் கூட்டமாக உடல்கள் கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அங்கிருந்தவர்கள் கூறுகையில் “அந்த கன்டெய்னருக்குள் உதவி, உதவி எனக் குரல் கேட்டது.

அதையடுத்துதான் நாங்கள், போலீஸாருக்கு தகவல் கொடுத்தோம். அவர்கள் வந்து கன்டெய்னரை திறந்தபோது ஏராளமானோர் உயிரிழந்து கிடந்தனர். பலர் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தனர்” எனத் தெரிவித்தனர்.

மெக்சிக்கோ நாட்டிலிருந்து அகதிகளாக அமெரிக்காவுக்குள் எல்லைவழியாக சட்டவிரோதமாக வந்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.

சான் அன்டோனியோ தீதடுப்பு தலைவர் சார்லஸ் ஹூட் கூறுகையில் “46 பேரின் உடல்கள் கன்டெய்னருக்குள் கிடந்ததைக் கண்டுபிடித்தோம்.

முதல்கட்ட விசாரணையில் இவர்கள்அகதிகளாக இருக்கலாம். இவர்கள் அனைவரும் உயிரிழந்துவிட்டனர்.

12க்கும் மேற்பட்டோர் பதின்வயதினர், 4 குழந்தைகள் இதில் இருந்தனர். சான் அன்டோனியோவில் கடும் வெப்பம் நிலவுகிறது.

ஏறக்குறைய 39 டிகிரி வெப்பம்இருப்பதால், கன்டெய்னருக்குள் வந்தவர்கள் காற்று வசதி இல்லாமல் இறந்திருக்கலாம். இவர்களுக்கு உணவும், குடிநீரும் இல்லை. ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம்” எனத் தெரிவித்தார்.

ஆன்டோனியோ நகர போலீஸ் தலைவர் மாக்மனாஸ் கூறுகையில் “கன்டெய்னரில் உடல்கள் கண்டுபிடிக்ககப்பட்டது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகிறோம்.

60 தீத்தடுப்பு வீரர்கள், 20 தீயணைப்பு வாகனங்கள், 10 மருத்துவக் குழுக்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.