ரூ. 4 லட்சம் பணம் பறிப்பு ரவுடி சிறையில் அடைப்பு

சென்னை, தேனாம்பேட்டையில் நான்கு லட்சம் பணம் பறித்த வழக்கில், ரவுடி கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னை, புது வண்ணாரப்பேட்டை, பூண்டி தங்கம்மாள் தெருவை சேர்ந்தவர் மைதீன் ராவுத்தர்(47), இவர் உலர் பழம் மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.

கடந்த 20ம்‌ தேதி அன்று இரவு, தேனாம்பேட்டை, எல்டாம்ஸ் சாலையில் இந்தியன் வங்கி எதிரில் உள்ள டெபாசிட் இயந்திரத்தில் பணம் செலுத்த சென்றார்.

அங்கு வந்த மர்ம நபர்கள் நான்கு பேர், மைதீனை கத்தி முனையில் மிரட்டி, அவரிடம் இருந்த ரூ. 4 லட்சம் பணம் பறித்து தப்பிவிட்டனர்.

புகாரின் படி தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, நேற்று பழைய வண்ணாரப்பேட்டை, சிமெண்ட் ரோட்டை சேர்ந்த ஜான் ஜெய் சிங்(43) என்பவரை கைது செய்தனர்.

இவரிடம் இருந்து ரூ. 4,300 பறிமுதல் செய்தனர். ஜான் ஜெய் சிங் மீது மூன்று கொலை, ஏழு கொலை முயற்சி என 26 வழக்குகள் உள்ளன. விசாரணைக்கு பின், ஜான் ஜெய் சிங் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.