மத்திய அரசின் பெயரை சொல்லி ரூ.4 கோடி பருப்பு வாங்கி மோசடி; தலைமறைவு நபர், உபியில் கைது

மத்திய அரசின் பெயரை சொல்லி ரூ.4 கோடி மதிப்பில், வியாபாரியிடம் பருப்பு வாங்கி மோசடியில் ஈடுபட்டு தலைமறைவான நபர், உத்தரபிரேதசத்தில் கைது செய்யப்பட்டார்.

சென்னை, தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை பகுதியைச் சேர்ந்தவர் என்.ஆர்.பாலாஜி (46).

இவர் பருப்பு மொத்த வியாபாரம் செய்து வருகிறார். பாலாஜியிடம், திருவல்லிக்கேணி பழனியப்பன் கோயில் வடக்கு மூன்றாவது தெருவைச் சேர்ந்த  பாண்டியராஜன் (44) அறிமுகமாகி, பழகினார்.

இதேபோல பாண்டியராஜனின் கூட்டாளிகள் ஜெய் கணேஷ், முருகேசன், ஹரிஹரன், உமா ஆகியோரும் பாலாஜியிடம் பழகியுள்ளனர்.

அப்போது பாண்டியராஜன், தான் கிஷான் ரேசன் ஷாப் என்ற பெயரில் விவசாயிகளிடம் நேரடியாக விளைப் பொருள்களை மொத்தமாக வாங்கி மக்களிடம் விற்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் மத்திய அரசால் வழங்கப்பட்ட போலி ஒப்பந்த ஆணைகளை பாலாஜியிடம் காண்பித்துள்ளார். அதை பார்த்த பாலாஜி, அது உண்மையாண ஆணை என நம்பியுள்ளார்.

இதையடுத்து பாலாஜி, ரூ.3.65 கோடி மதிப்புள்ள பருப்பு மற்றும் பயிறு வகைகளை பாண்டியராஜன் தரப்புக்கு வழங்கியுள்ளார்.

அவற்றை பெற்றுக் கொண்ட பாண்டியராஜன், அதற்குரிய பணத்தை வழங்காமல் ஏமாற்றியுள்ளார்.

இதனால் பாலாஜி, பாண்டியராஜன் குறித்து விசாரித்தார். அப்போது பாண்டியராஜன் மோசடி செய்திருப்பதும், மத்திய அரசு அவருக்கு எந்த ஆணையும் வழங்கவில்லை என்பதும், போலியாக தயாரித்த ஆணையை காட்டி மோசடி செய்திருப்பதும் பாலாஜிக்கு தெரியவந்தது.

இதையடுத்து பாலாஜி, சென்னை பெருநகர காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவில் புகார் செய்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் பாண்டியராஜன், அவரது கூட்டாளிகள் ஜெய்கணேஷ், முருகேசன், ஹரிஹரன், உமா ஆகியோர் மீது மோசடி வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில் பாண்டியராஜனை கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி கைது செய்தனர்.

இதற்கிடையே வழக்கின் முக்கிய எதிரியாக கருதப்பட்ட ஜெய்கணேஷை மத்தியக் குற்றப்பிரிவினர் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில்ஜெய் கணேஷ் உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் பதுங்கியிருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்து, அங்குச் சென்று அவரை கைது செய்ததாக மத்தியக் குற்றப்பிரிவினர் திங்கள்கிழமை தெரிவித்தனர்.

விசாரணைக்கு பின்னர் ஜெய் கணேஷ், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மீதி நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.