வில்லிவாக்கத்தில் பயங்கரம் ரவுடியை கொன்று, தரதரவென உடலை இழுத்து சென்ற கும்பல்

சென்னை, வில்லிவாக்கம் பகுதியில், ரவுடியை கொடூரமாக கொன்று, உடலை தரதரவென ஒரு கும்பல் இழுத்து சென்றன.

சென்னை, வில்லிவாக்கம், பாரதி நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் அலெக்ஸ் (21). இவர் மீது ஒரு கொலை உள்ளிட்ட  பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் அலெக்ஸ், நேற்று இரவு  வீட்டில் இருந்து வெளியில் வந்து கருமாரி அம்மன் கோயில் அருகில் காற்றுக்காக நின்றுக் கொண்டிருந்தார். அப்போது,அங்கு வந்த ஒரு கும்பல் அலெக்சை அரிவாளால் வெட்டியது. ரத்தவெள்ளத்தில் சரிந்த அலெக்சை வெறித்தனமாக அடித்து அங்கிருந்து தரதரவென இழுத்துச் சென்றது.

இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அலெக்சின் தாயார் விஜயாவிடம் தெரிவித்தனர். அவர் உடனடியாக வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். தகவலறிந்த போலீசார் சம்பவ பகுதியில் விசாரணையில் ஈடுபட்டனர். அந்தப் பகுதி முழுவதும் அலெக்சை  தேடினர்.  பின்னர் நியூ ஆவடி சாலை ஆட்டுத் தொட்டி அருகே அலெக்ஸ் தலைப் பகுதி முழுவதும் சிதைந்த நிலையில், உடல் முழுவதும் காயங்களுடன் பிணமாக கிடந்தார். அலெக்ஸ்  உடலை கைப்பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரை தேடி வருகின்றனர். முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்தது தெரியவந்தது.