டெஸ்ட் தரவரிசை: அஸ்வின் அபார முன்னேற்றம்: ரோஹித் புதிய உச்சம்

அஸ்வின்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று வெளியிட்ட டெஸ்ட் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி வீரர் ரோஹித் சர்மா தனது வரலாற்றில் சிறந்த தரவரிசையைப் பெற்றுள்ளார்.

அகமதாபாத்தில் நடந்த பகலிரவு டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 66 ரன்களும், 25 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் ரோஹித் சர்மா இருந்தார். இதையடுத்து, டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில், ரோஹித் சர்மா 742 புள்ளிகளுடன் 8-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் ரோஹித் சர்மா டெஸ்ட் தரவரிசையில் 722 புள்ளிகள் எடுத்ததே சிறந்ததாக இருந்தது அதை இப்போது முறியடித்துள்ளார்.

சதம் அடித்த ரோஹித் சர்மா

அதேசமயம், 3-வது டெஸ்ட் போட்டியில் இரு இன்னிங்ஸிலும் பேட்டிங்கில் சொதப்பிய சத்தேஸ்வர் புஜாரா, 708 புள்ளிகளுடன் 10-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். மற்ற வகையில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதல் 10 இடங்களில் எந்த மாற்றமும் இல்லை. முதலிடத்தில் கேன் வில்லியம்ஸனும், 2வது இடத்தில் ஸ்டீவ் ஸ்மித், 3-வது இடத்தில் லாபுஷேன் தொடர்கின்றனர். ஜோ ரூட் 4-வது இடத்திலும், கோலி 5-வது இடத்திலும் உள்ளனர்.

இங்கிலாந்துக்கு எதிராக 3-வது டெஸ்ட் போட்டியில் 11 விக்கெட்டுகளை வீழ்த்திய அக்ஸர் படேல், 38-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். அஸ்வின் 7 விக்கெட்டுகள் வீழ்த்தியதையடுத்து, 4 இடங்கள் முன்னேறி 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். ஆல்ரவுண்டர்கள் வரிசையில் அஸ்வின் 5-வது இடத்திலேயே நீடிக்கிறார். இந்திய வீரர் ரவிந்திர ஜடேஜா 2-வது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் மே.இதீவுகள் வீரர் ஜேஸன் ஹோல்டர் உள்ளார்.

5 விக்கெட்டுகளை வீழ்த்திய அக்ஸர் படேல்

பந்துவீச்சாளர்கள் வரிசையில் முதலிடத்தில் ஆஸி. வீரர் பாட்கம்மின்ஸும், 2-வது இடத்தில் நியூஸி வீரர் நீல் வாக்னரும் உள்ளனர். ஸ்டூவர்ட் பிராட் 7-வது இடத்துக்கும், ஆன்டர்ஸன் 6-வது இடத்துக்கும் சரிந்துள்ளனர். பும்ரா 746 புள்ளிகளுடன் 9-வது இடத்துக்கு பின் தங்கியுள்ளார்.

இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் ஜேக் லீச் முதல்முறையாக முதல் 30 இடங்களுக்குள் நுழைந்து 28-வது இடத்தைப் பிடித்துள்ளார். கேப்டன் ஜோ ரூட் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய தன் மூலம், 16 இடங்கள் நகர்ந்து 72வது இடத்தையும், ஆல்ரவுண்டர்கள் வரிசையில் 13-வது இடத்துக்கும் நகர்ந்துள்ளார்.

இங்கிலாந்து வீரர் ஜேக் கிராலி முதல் இன்னிங்ஸில் 53 ரன்கள் சேர்த்ததன் மூலம், 15 இடங்கள் நகர்ந்து 46-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.