வருமானம் குறையுது, செலவை குறைக்கணும்! அதுக்காக நெட்பிளிக்ஸ் இப்படி செய்யலாமா!

சந்தாதாரர்கள் குறைந்து வருகிறார்கள், வருமானம் குறைகிறது என்பதற்காக நெட்பிளிக்ஸ் நிறுவனம் சமீபத்தில் 300 ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கியுள்ளது.

இதுவரை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கடந்த சில மாதங்களில் 450 பேரை வேலையிலிருந்து நீக்கியுள்ளது.

அமெரிக்காவில் அதிகரித்துவரும் வேலையின்மையும், வேலையிழப்பும் தொழிலாளர்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது.

நெட்பிளிக்ஸ் செய்தித்தொடர்பாளர் கூறுகையில் “எங்கள் வருமானம் குறைந்து வருகிறது, அதேநேரம் முதலீட்டிலும் கவனம் செலுத்தும்போது, இதுபோன்ற சில செலவுக் குறைப்பு நடவடிக்கைகளை செய்ய வேண்டும்.

நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்காக இதுவரை உழைத்தமைக்காக தொழிலாளர்களுக்கு நன்றி. கடினமான கொரோனா காலத்தில், பரிமாற்றத்தை நோக்கிநகர்வதற்கு கடினமாக உழைத்தார்கள்” எனத் தெரிவித்தார்.

2022ம் ஆண்டு முதல் காலாண்டான ஜனவரி முதல் மார்ச் வரை, நெட்பிளிக்ஸ் நிறுவனம் 2 லட்சம் சந்தாதாரர்களை இழந்துள்ளது.

சந்தாதாரர்களை இழந்ததால் நெட்பிளிக்ஸ் பங்குகள் சந்தையில் பெரும் அடிவாங்கின.

கடந்த மே மாதம் 150 ஊழியர்களை திடீரென வேலையிலிருந்து நெட்பிளிக்ஸ் நிறுவனம் நீக்கியது. இந்நிலையில் இந்தமாதம் 300 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியுள்ளது.

நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கு சமீபகாலமாக, அமேசான், வால்ட்டிஸ்னி, ஹூலு ஆகியவை கடும் போட்டியாக இருந்துவருவதால், சந்தையில் தன்னை நிலைநிறுத்துக்கொள்ள தடுமாறுகிறது.