இந்திய அணிக்கு பின்னடைவு! இங்கிலாந்து பயணத்தில் ரவிச்சந்திர அஸ்வின் இல்லை: காரணம் என்ன?

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவிச்சந்திர அஸ்வினுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணியுடன் அவர் செல்லவில்லை என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 16ம் தேதி இந்திய அணி இங்கிலாந்து புறப்பட்டு சென்றது. ஜூலை 1 முதல் 5ம் தேதிவரை எட்ஜ்பாஸ்டனில் இங்கிலாந்துடன் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது.

ஆனால் அஸ்வினுக்கு இங்கிலாந்து புறப்படும் முன் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில்அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது.

இதையடுத்து, அவர் இந்திய அணியுடன் இங்கிலாந்து செல்லாமல் தனிமைப்படுத்தப்பட்டார்.

தற்போது சிகிச்சையில் இருக்கும் ரவிச்சந்திர அஸ்வின் ஜூலை 1ம்தேதிக்குள் குணமடைந்துவிட்டால், அனைத்துவிதமான பரிசோதனைகளையும் முடித்தபின்புதான் இந்திய அணியுடன் இணைவார்.

இல்லாவிட்டால், அஸ்வின் இல்லாத நிலையில்தான் இந்திய அணி விளையாட வேண்டியதிருக்கும்.

அவ்வாறு அஸ்வின் இல்லாதது இந்திய அணிக்கு நிச்சயம் பின்னடைவாகத்தான் இருக்கும்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி லீசெஸ்டர்ஷையர் அணியுடன் ஒரு பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. அந்த ஆட்டத்தில் அஸ்வினால் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகையில் “இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணியுடன் அஸ்வின் செல்லவில்லை.

அவருக்கு புறப்படும் முன் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று இருந்தது.

ஜூலை 1ம் தேதி டெஸ்ட் போட்டி தொடங்கும் முன் அஸ்வின் குணமடைந்துவிடுவார் என்று நம்புகிறோம்.

ஆனால் லீசெஸ்டர்ஷையர் அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் அஸ்வினால் விளையாட முடியாது” எனத் தெரிவித்தன.

பந்துவீச்சாளர் பராஸ் மாம்ப்ரே, பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் ஆகியோர் மேற்பார்வையில் இந்திய அணியினர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ராகுல் திராவிட், ரிஷாப் பந்த், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை முடித்துவிட்டு, லண்டன் புறப்பட்டனர். செவ்வாய்கிழமை லீசெஸ்டர் புறப்படுவார்கள்.

இதற்கிடையே வரும் 26 மற்றும் 28ம் தேதிகளில் அயர்லாந்து அணிக்கு எதிராக இரு டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.

விவிஎஸ் லட்சுமண் பயிற்சியில் இந்திய அணிக்கு 23ம் தேதி அயர்லாந்து புறப்படுகிறது. அங்கு 3 நாட்கள் ஓய்வுக்குப்பின், டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.

இந்திய டெஸ்ட் அணி இங்கிலாந்துக்கு எதிராக 5-வது டெஸ்ட் போட்டியை விளையாட உள்ளது.

கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக கடைசி டெஸ்ட் போட்டி கைவிடப்பட்டது. அப்போது இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இந்திய அணியுடன் எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டி முடிந்தபின், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் இங்கிலாந்து அணி விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.