ராம் குமார் தற்கொலை வழக்கு: மருத்துவர் கூற்றும்,சிறைத்துறை மருத்துவரின் சாட்சியமும், குறுக்கு விசாரணையில் பரபரப்பு..!

சுவாதி கொலை வழக்கில், தற்கொலை செய்துக்கொண்ட ராம்குமாரின் வழக்கில், அரசு மருத்துவரின் கூற்றும், சிறைத்துறை மருத்துவரின் சாட்சியமும், மனித உரிமை ஆணையத்தில் நடந்த குற்றுக்கு விசாரணையில் பரபரப்பு ஏற்பட்டன.

சென்னை, நுங்கம்பாக்கம், ரயில் நிலையத்தில் சுவாதி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.

அந்த  வழக்கில் அவர் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டபோது உடலில் விரைப்புத்தன்மை இருந்தது என்பதால் அவர் முன்னரே இறந்திருக்க கூடும் என அரசு மருத்துவர் முன்னர் சாட்சியம் அளித்திருந்தார்.

தற்போது அவர் கூற்றை உறுதி செய்யும் வகையில் சிறைத்துறை மருத்துவர் தான் சோதித்தபோது நாடித்துடிப்பு இல்லை என மனித உரிமை ஆணையம் முன் சாட்சியம் அளித்துள்ளார்.

 
சென்னையில், 2016 ஆம் ஆண்டு ஜூன் 24ம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொடூரமாக வெட்டிக்கொல்லப்பட்டார்.

நுங்கம்பாக்கம் போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி, அவரின் நண்பரான ராம்குமார் என்பவரை ஜூலை முதல் தேதி சொந்த ஊரில் அவரை கைது செய்தனர்.

அப்போது, ராம்குமார், பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர், குணமாக்கி, ராம்குமாரை புழல் சிறையில் அடைத்தனர்.

ஒரு தலை காதலால், இந்த கொலை நடந்தது தெரியவந்தது,  புழல் சிறையில் இருந்த ராம்குமார் 2016ம் ஆண்டு செப்டம்பர் 18 ஆம் தேதி மின்சார வயரை கடித்து, தற்கொலைக்கு முயன்றார்.

ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு சிகிச்சை அளித்தும் அவர் பிழைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

ராம்குமார் மரண வழக்கை மாநில மனித உரிமை ஆணையம் கையிலெடுத்தது. நீண்ட ஆண்டுகள் கடந்த நிலையில் கடந்த மாதம் ராயப்பேட்டை அரசு மருத்துவர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் ராம்குமார் மரணம் குறித்து திடுக்கிடும் தகவல்களை ஆணைய விசாரணையில் தெரிவித்தது வெளிவந்தது.

ராம்குமாரின் உடல் திசுக்களில் நடத்தப்பட்ட பரிசோதனையின் மூலம் அவர் மின்சாரம் பாய்ந்து இறந்தார் என்பதற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என ஹிஸ்டோபாதாலஜி ஆய்வில் தெரிய வந்ததாக துறை நிபுணர்கள் தெரிவித்திருந்தனர். ஆணையம் முன் ஆக. 18 ஆம் தேதி தாக்கல் செய்த அறிக்கையில் இந்த தகவல் கூறப்பட்டிருந்தது.

மேலும் இந்த அறிக்கையில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அப்போது பேராசிரியர்களாக இருந்த மருத்துவர்கள் ஆண்டாள், வேணு ஆனந்த் ஆகியோர் கடந்த 2016, அக்டோபர் 7ஆம் தேதி ராம்குமாரின் உடலை ஆய்வு செய்தனர். அப்போது அவரது மூளை, இதய திசுக்கள், நுரையீரல்கள், கல்லீரல், நாக்கு, உதடுகள், மண்ணீரல், சிறுநீரகங்கள் ஆகியவை நல்ல நிலையில் இருந்ததாக சான்றளித்திருந்தனர்.

2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 18 ம் தேதி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு ராம்குமாரின் உடல் கொண்டு வரப்பட்டது. அந்த உடலுடன் சிறைத் துறை மருத்துவரும் வந்திருந்ததாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை மருத்துவ அதிகாரி டாக்டர் சையது அப்துல் காதர் தெரிவித்திருந்தார்.

இந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்த எந்த நகலையும் சிறை மருத்துவர் அளிக்கவில்லை. மேலும் மின்சாரம் பாய்ந்ததாக கூறப்பட்ட நிலையில் ராம்குமாருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதற்கான ஆவணங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை என்று தெரிவித்திருந்தார்.


இந்த வழக்கு மீண்டும் டிச 7 க்கு ஒத்திவைக்கப்பட்டது.ராம்குமார் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டபோது உடலில் விரைப்புத்தன்மை இருந்தது என்பதால் அவர் முன்னரே இறந்திருக்க கூடும் என அரசு மருத்துவர் முன்னர் சாட்சியம் அளித்திருந்தார்.

இந்த  நிலையில் தற்போது அவர் கூற்றை உறுதி செய்யும் வகையில் சிறைத்துறை மருத்துவர் தான் சோதித்தபோது நாடித்துடிப்பு இல்லை என மனித உரிமை ஆணையம் முன் சாட்சியம் அளித்துள்ளார்.