உத்தப்பாவுக்கு ‘மஞ்சள் டிரஸ்’ : ராஜஸ்தானிலிருந்து சிஎஸ்கேவுக்கு மாற்றம்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த முக்கியத் தொடக்க ஆட்டக்காரர் ராபின் உத்தப்பா, டிரேடிங் முறையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கடந்த13-வது ஐபிஎல் தொடரில் 12 ஆட்டங்களில் விளையாடிய 35 வயதாகும் உத்தப்பா 196 ரன்கள் குவித்தார். ஐபிஎல் தொடக்கத்தில் கடந்த 2008-ல் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த உத்தப்பா, அதன்பின் 2009, 2010ம் ஆண்டுகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் வாங்கப்பட்டார்.

அதன்பின் 2011, 2012, 2013ம் ஆண்டுகளில் புனே வாரியர்ஸ் அணியில் விளையாடிய உத்தப்பா, 2014 முதல் 2019-ம் ஆண்டுவரை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் நீடித்தார். அதன்பின் 2020ம் ஆண்டில் நடந்த ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விலைக்கு வாங்கியது. இதுவரை ஐபிஎல் தொடரில் 189 போட்டிகளில் விளையாடி 4607 ரன்களை உத்தப்பா குவித்துள்ளார்.

சமீபத்தில் நடந்த வீரர்கள் விடுவிப்பு மற்றும் தக்கவைப்பு பட்டியலில் கூட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உத்தப்பாவை விடுவிக்கவில்லை, தக்கவைத்துக் கொண்டது. ஆனால், நேற்று திடீரென வெளியி்ட்ட அறிவிப்பில் டிரேடிங் முறையில் சிஎஸ்கே அணிக்கு உத்தப்பா மாற்றப்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிஎஸ்கே அணி சார்பில் ட்விட்டரில் பதிவிட்ட செய்தியில் “ நம்முடைய புதிய பேட்ஸ்மேன் ராபின் உத்தப்பா. ராபின் உத்தப்பாவை மஞ்சள் வணக்கத்துடன் வரவேற்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.