வட்டியை உயர்த்தியது எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ்: குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் குறைவு

எல்ஐசியின் ஹவுசிங் பைனான்ஸ் வீட்டுக்கடன்களுக்கான வட்டியை 20 புள்ளிகள் குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் உயர்த்தியுள்ளது.

நாட்டில் பணவீக்கம் கடந்த ஜனவரி மாதம் முதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பணவீக்கத்தை 6 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி அளவு வைத்திருக்கிறது.

ஆனால், ஜனவரி மாதத்திலிருந்து பணவீக்கம் 6 சதவீதத்தை கடந்து வருகிறது, உச்ச கட்டமாக மார்ச் மாதம் 6.95 சதவீதத்தையும், ஏப்ரல் மாதம் 7.79 சதவீதத்தையும் எட்டியது.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி ஏற்கெனவே வட்டி வீதத்தில் 40 புள்ளிகளை உயர்த்திவிட்டது. ஏப்ரல் மாதத்திலும் பணவீக்கம் 7.49 சதவீதமாக உயர்ந்திருப்பதிருப்பதால், ஜூன் மாதம் நடக்கும் நிதிக்கொள்கைக் கூட்டத்தில் ரிசர்வ் வங்கி மேலும் வட்டி வீதத்தை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரிசர்வ் வங்கி வட்டி வீதத்தை உயர்த்தியதைத் தொடர்ந்து பல்வேறு வங்கிகளும் கடனுக்கான வட்டி வீதத்தையும், டெபாசிட்களுக்கான வட்டியையும் உயர்த்தி வருகின்றன.

அந்த வகையில் எல்ஐசியின் ஹவுசிங் பைனான்ஸ் (எல்ஐசி ஹெச்எப்எல்) வீட்டுக்கடனுக்கான வட்டியை 20 புள்ளிகள் உயர்த்தியுள்ளது.

இதற்கு முன் வீட்டுக்கடனுக்கான வட்டி 6.70 சதவீதமாக இருந்தநிலையில் இனிமேல் 6.90 சதவீதமாக அதிகரிக்கும்.

கடன்தர மதிப்பீடான சிபில் ஸ்கோரில் வாடிக்கையாளர் ஒருவரின் மதிப்பெண் 700 மற்றும் அதற்கு மேல்இருந்தால், அவர்களுக்கு 20 புள்ளிகள் மட்டும் வட்டி உயர்த்தப்படும்.

இந்த புதிய வட்டிவீதம் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அமலுக்குவந்துள்ளது. வாடிக்கையாளர்களில் சிபில் ஸ்கோர் 700 புள்ளிகளுக்கும் குறைவாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கான வட்டிவீதம் 25 புள்ளிகள் உயர்த்தப்படும்.

புதிதாக கடன் வாங்குவோருக்கு வட்டிவீதம் 40 புள்ளிகள் உயர்த்தப்படும் என எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே ஹெச்டிஎப்சி வங்கி, கனரா வங்கி, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா கரூர் வைஸ்யா வங்கி ஆகிய வங்கிகள் தங்களின் கடனுக்கான வட்டியை உயர்த்திவிட்டது குறிப்பிடத்தக்கது.