ராகுல் காந்தியிடம் 3-வது முறையாக சம்மன்: அமலாக்கப்பிரிவு விசாரணைக்கு இன்றும் ஆஜர்

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு 3-வது முறையாக அமலாக்கப்பிரிவு சம்மன் அனுப்பியது.

இதையடுத்து, 3-வது நாளாக இன்றும்(ஜூன்15) ராகுல் காந்தி, அமலாக்கப்பிரிவு முன் விசாரணைக்காக ஆஜராகிறார்.

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனத்தை தொடங்கினார். அந்த நிறுவனம் மூலம், நேஷனல் ஹெரால்டு என்ற நாளேடு தொடங்கப்பட்டது.

இந்தநிறுவனத்தை நடத்த ரூ.90 கோடியை காங்கிரஸ் கட்சி கடனாகக் கொடுத்தது. இந்த கடனை திருப்பிச் செலுத்தாமல் நேஷனல் ஹெரால்ட் நிறுவனம் நஷ்டப்பட்டு கடந்த 2008ம் ஆண்டு நாளேடு நிறுத்தப்பட்டது.

பின்னர் 2016ம் ஆண்டு முதல் நேஷனல் ஹெரால்ட் நாளேடு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் பங்குகளை ரூ.50 லட்சத்துக்கு யங் இந்தியா நிறுவனத்துக்கு மாற்றப்பட்டபோது, அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனத்தில் பங்குதாரர்களின் ஒப்புதல்களைப் பெறவில்லை.

இந்த நிறுவனத்தின் 76% பங்குகள் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியிடமும், 24 % பங்குகள் ராகுல் காந்தியிடமும் உள்ளன.

ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள அசோசியேட்டட் ஜர்னல் பங்குகளை வெறும் ரூ.50 லட்சத்துக்கு மாற்றியதில் முறைகேடு நடந்ததாகக் கூறி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன்சுவாமி வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில் நேஷனல் ஹெரால்டு வழக்கில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு அமலாக்கப்பிரிவு சம்மன் அனுப்பப்பட்டது.

இதில் ராகுல் காந்தி நேற்று முன்தினம் அமலாக்கப்பிரிவு விசாரணைக்கு ஆஜராகினார். இதில் ராகுல் காந்தியிடம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் ஏறக்குறைய 10 மணிநேரம் விசாரணை நடத்தினர்.

2-வதுநாளாக நேற்றும் ராகுல் காந்தியிடம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரிக்க சம்மன் அனுப்பினர். இதைப் பெற்றுக்கொண்ட ராகுல் காந்தி நேற்றும் அமலாக்கப் பிரிவு விசாரணைக்கு நேரில் ஆஜராகினார்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் நேற்று காலை 11.30 மணிக்கு அமலாக்கப்பிரிவு தலைமை அலுவலகத்துக்கு விசாரணைக்காக ஆஜராகினர்.

ராகுல் காந்தியிடம் ஏறக்குறைய 4 மணிநேரம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அதன்பின் பிற்பகல் 3.30 மணிக்கு உணவு இடைவேளை அளிக்கப்பட்டு அதன்பின் மாலை 4.30 மணிக்கு விசாரணையில் ராகுல் காந்தி மீண்டும் இணைந்தார். இந்த விசாரணைக்குப்பின் இரவு 9மணிக்கு ராகுல் காந்தி வெளியேறினார்.

இந்நிலையில் அமலாக்ககப்பிரிவு அதிகாரிகள் தரப்பில் கூறுகையில் “காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியிடம் 2-வது நாளாக இன்று (நேற்று) விசாரணை நடத்தினோம்.

காலை 11.30 மணிக்கு தொடங்கிய விசாரணை பிற்பகல் வரை 3.30 மணிவரை நடந்தது. அதன்பின் மாலை 4.30 மணிக்கு மீண்டும் தொடங்கிய விசாரணை இரவு 9மணிவரை நடந்தது.

அவரிடம் 3-வது நாளாக நாளையும் (இன்று) விசாரணை நடத்த இருக்கிறோம். அதற்கான சம்மன் வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தனர்.