ஹிட்டலரும், பாஜகவின் தேர்தல் வெற்றியும்: நிர்மலாவுக்கு எதுவும் புரியல: ராகுல் காந்தி விளாசல்

ஹிட்லரின் தேர்தல் வெற்றி குறித்தும், பாஜகவின் தேர்தல் வெற்றி குறித்தும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடுமையாகச் சாடிப் பேசினார்.

நாட்டின் பிரச்சினைகள் குறித்து நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு புரிதல் ஏதும் இல்லை என்றும் ராகுல் காந்தி விளாசினார்.

நாட்டின் விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி வரி உயர்வு, வேலையின்மை அதிகரிப்புக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நாடுமுழுவதும் இன்று போராட்டம் நடத்துகிறது. டெல்லியில் போராட்டத்தில் பங்கேற்கும் முன் ராகுல் காந்தி நிருபர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது, சர்வாதிகாரம், பாஜகவின் தேர்தல் வெற்றி, ஹிட்லர் குறித்தும் ஒப்பிட்டு பேசினார்.

அதுமட்டுமல்லாமல் நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நாட்டின் பிரச்சினைகள் குறித்த அடிப்படை புரிதல் இல்லை என்றும் கடுமையாகச் சாடினார்.

ராகுல் காந்தி பேசியதாவது:
இந்தியாவில் ஜனநாயகம் என்பது இல்லை. 4 பேருக்காக மட்டும் சர்வாதிகாரம் நடக்கிறது.

ஜனநாயகம் மரிப்பதை இந்த தேசம் பார்த்து வருகிறது. நூற்றாண்டுகளாக செங்கல், செங்கலாக கட்டப்பட்ட இந்த தேசம், நம்கண்முன் அழிந்து வருகிறது.

நான் உண்மை பேசுவதுதான் எனக்குப் பிரச்சினை. இதற்காக எதைப்பார்த்தும் பயப்படமாட்டேன்.

விலைவாசி உயர்வு குறித்து தொடர்ந்து பேசுவேன், அதற்காக இன்னும் அதிகமாகத் தாக்கப்படுவேன்.

மிரட்டுபவர்கள் எல்லாம் அச்சப்படுபவர்கள். அரசியல்வாதிகள் என்னைத் தாக்கும்போது நான் மகிழ்ச்சி அடைவேன்.

இந்த அரசு 4 பேரின் நலன்களுக்காக இயங்கி வருகிறது. இந்த சர்வாதிகாரம், 3 மிகப்பெரிய தொழிலதிபர்களுக்காக இருக்கிறது. ஆர்ஆஸ்எஸ் அமைப்பின் கீழ் எந்த அரசு அமைப்பும் சுயாட்சித்தன்மையுடன் இல்லை.

அனைத்தும் ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்த ஒட்டுமொத்த கட்டமைப்புக்காத்தான் போராடி வருகிறோம். அரசுக்கு எதிராக யாரேனும் பேசினால் அவர்கள்மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.

நிதிசார்ந்த முற்றுரிமை, அமைப்புமுற்றுரிமை இருப்பதால்தான் எதிர்க்கட்சிகள் வலுவிழந்து உள்ளனர்.

பாஜக தேர்தலில் வெற்றி பெற்றதாகக் கூறிக்கொள்ளலாம். ஹிட்லர்கூட தேர்தலில் வெல்லலாம்.

அவரின் அரசாங்கத்தின் அனைத்து அமைப்புகளும் அவரிடம் இருந்தால் ஹிட்லரும் தேர்தலில் வெல்லாம்.

அரசு அமைப்புகளுக்கும், நிறுவனங்களுக்கும் அதிகாரத்தை வழங்குங்கள், எப்படி தேர்தலில் நீங்கள் வெல்வீர்கள் என்பதை நான் காண்பிக்கிறேன்

நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு என்ன நடக்கிறது என்பது பற்றி எந்தப் புரிதலும் இல்லை. அவரிடம் பேச்சு மட்டுமே இருக்கிறது.

அவர் சிறப்பாகச் செயல்பட்டிருந்தால் நாங்கள் ஏன் இங்கு வரப்போகிறோம். நிதியமைச்சர் கூறுவதுமுற்றிலும் முட்டாள்தனமானது.

இந்தியா மிகப்பெரிய அளவில் வேலையின்மை பிரச்சினையை எதிர்கொள்வது அவருக்குத் தெரியவில்லை.

நிர்மலா சீதாராமன் கூறுவது உண்மை அல்ல, நிதர்சனம் வேறுபட்டது. புதிதாக ஒரு தோற்றத்தை உருவாக்குகிறார்கள்.

ஒருபுறம் ஸ்டார்ட்அப் பற்றி பேசிவிட்டு மறுபுறம் வேலையிழப்பு செய்து தொழிலாளர்களை அனுப்புகிறார்கள்.

கொரோனா காலத்தில் யாரும் உயிரிழக்கவில்லை என அரசு கூறுகிறது. சர்வதேச அமைப்புகள் இந்தியாவில் 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்இறந்ததாக் கூறுகிறது.
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.