ராகுல் காந்தியின் கல்வித் தகுதி, முதல் சம்பளம்: ஸ்வாரஸ்யத் தகவல்கள்

ராகுல் காந்தியின் கல்வித் தகுதி என்ன, குடும்பப் பின்னணி என்ன, வாங்கிய முதல் சம்பவம் ஆகியவை குறித்த தனிப்பட்ட விஷயங்களை அவரே மனம் திறந்து பகிர்ந்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரை சென்று வருகிறார்.

இதுவரை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம்,ஹரியானா, டெல்லி, பஞ்சாப் சென்று தற்போது ஜம்மு காஷ்மீருக்குள் சென்றுள்ளார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி தொடங்கிய யாத்திரையை ராகுல் காந்தி வரும் 30ம் தேதி முடிக்கிறார்

இதற்கிடையே ராகுல் காந்தி, யூடியூப் தளம் ஒன்றுக்கு மனம்திறந்து பேட்டியளித்துள்ளார். அதில் தனது தனிப்பட்ட வாழ்க்கை, உணவுகள், கல்வி முறை, முதன்முதலில் வேலைக்கு சென்றஇடம், வாங்கிய ஊதியம் எனப் பல்வேறு விஷயங்களை மனம் திறந்து பேசியுள்ளார்.

ராகுல் காந்தி தனது குடும்ப பாரம்பரியம், கல்வி குறித்துக் கூறுகையில் “நாங்கள் காஷ்மீர் பண்டிட் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அங்கிருந்து அலகாபாத்துக்கு குடிபெயர்ந்தோம். என் தாத்தா பார்சி இனத்தைச் சேர்ந்தவர் எங்கள் குடும்பம் கலப்புக் குடும்பம்.

என் பாட்டி இந்திரா காந்தி கொல்லப்பட்டதும் எனக்குரிய பள்ளிவாழ்க்கை முடிந்துவிட்டு வீட்டுக்கே பள்ளிக்கூடம் வந்துவிட்டது. அதன்பின் என்னை பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப மறுத்துவிட்டார்கள்.

உயர்கல்வியில் டெல்லி ஸ்டீபென்ஸ் கல்லூரியில் வரலாறு படித்தபின், ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகள் மற்றும் அரசியல் பயின்றேன்.

என் தந்தை கொல்லப்பட்டபின், ப்ளோரிடாவில் உள்ள ரோலின்ஸ் கல்லூரியில் சேர்ந்தேன். அங்கு பொருளாதாராம், சர்வதேச உறவுகள் படித்தேன்.

பின்னர் பிரிட்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் டெவலப்மென்ட் எக்கானிமிக்ஸ் முதுநிலைபட்டம் பெற்றேன்” எனத் தெரிவித்தார்.

ராகுல் காந்தி தனது முதல் வேலை குறித்து கூறுகையில் “என்னுடைய 24 அல்லது 25 வயதில் நான் முதன்முதலில் வேலைக்குச் சென்றேன்.

ஒரு கன்சல்டிங் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து, முதல்மாதமாக 2,500 முதல் 3 ஆயிரம் பவுண்ட்கள் ஊதியமாகப் பெற்றேன்” எனத் தெரிவித்தார்.

பிரதமராக வந்தால் என்ன செய்ய நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு ராகுல் காந்தி பதில் அளிக்கையில் “நாட்டின் கல்விமுறையை மாற்றுவேன், சிறு குறு, நடுத்தரத் தொழில்களுக்கு உதவவேண்டும், கடினமான நேரத்தில் சிக்கியிருக்கும் மக்களைப் பாதுகாக்க வேண்டும்.

குறிப்பாக விவசாயிகள், வேலையில்லாத இளைஞர்கள் மீது கவனம் செலுத்தவேண்டும். இந்த யாத்திரையின் நோக்கமே, நாட்டில் பரப்பப்பட்டு வரும் வெறுப்பு, கோபம், வன்முறைக்கு எதிராகத்தான்” எனத் தெரிவித்தார்.