நைட் கிளப்பில் ராகுல் காந்தி: காங்கிரஸுக்கு பதிலடி கொடுத்த பாஜக: வைரலாகும் வீடியோ

நைட் கிளப்புக்கு சென்று குறித்த வீடியோவை பாஜக வெளியிட்டு கடுமையாக விமர்சித்துள்ளது.

பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு பொறுப்பாளர் அமித் மாளவியா இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ எப்போது எங்கு எடுக்கப்பட்டது என்பது குறித்த எந்தத் தகவலும் இல்லை.

பிரதமர் மோடி 3 நாட்களுக்கு வெளிநாடு பயணம் மேற்கொண்டது குறித்து காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தது. அதற்குப் பதிலடியாக பாஜக இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது.

பாஜக தகவல்தொழில்நுட்பப் பிரிவு பொறுப்பாளர் அமித் மாளவியா உள்ளிட்ட பாஜக முக்கிய நிர்வாகிகள் பலரும் இந்த வீடியோவை தங்களின் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

அமித் மாளவியா தனது பதிவில் கூறுகையில் “மும்பை நகரம் முழுவதும் கட்டுப்பாடான சூழல் இருந்தபோது, ராகுல் காந்தி நைட் கிளப்புக்குச் சென்றுள்ளார்.

காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பமாக இருந்தநேரத்தில் அதைப் பொருட்படுத்தாமல் ராகுல் காந்தி நைட்கிளப்புக்குச் சென்றுள்ளார். நைட்கிளப்புக்குச் செல்வதை ராகுல் காந்தி வழக்கமாக வைத்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி தங்களின் தலைவர் பதவிக்கு வெளியிலிருந்து புதியநபரைக் கொண்டுவருவதற்கு மறுத்தவுடனே, பிரதமர் வேட்பாளருக்கான பணிகள் தொடங்கிவிட்டன” எனத் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த வீடியோ எப்போது, எங்கு எடுக்கப்பட்டது குறித்த தெளிவானத் தகவல் இல்லை. இந்த வீடியோ நேபாளத்தில் உள்ள காத்மாண்டு நகரில் எடுக்கப்பட்டிருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் மோடி 3 நாட்கள் பயணமாக ஜெர்மன், போலந்து, பிரான்ஸ் நாடுகளுக்குச் சென்றுள்ளார். இந்தப் பயணத்தை விமர்சித்து காங்கிரஸ் கட்சி விமர்சித்திருந்தது.

காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் “நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் ஓடுகின்றன, ஆனால், சாஹேப் வெளிநாடு செல்லத்தான் விரும்புகிறார்” என விமர்சித்திருந்தது.

இதற்கு பதிலடியாகவே ராகுல் காந்தி நைட்கிளப்புக்குச் சென்ற வீடியோவை பாஜக வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை பகிர்ந்து பாஜகவினர் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து ப திலடி கொடுத்து வருகிறார்கள்.

ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பம் இருந்தபோதுகூட ராகுல் காந்தி நாட்டில் இல்லை. வெளிநாடு சென்றுவிட்டார்.

காங்கிரஸ் கட்சிக்குள் தேர்தல்வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோரை சேர்ப்பது குறித்து ஆலோசனை நடந்தபோதுகூட ராகுல் காந்தி நாட்டில் இல்லை என்று பாஜகவினர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

பாஜக தலைவர் தஜிந்தர் பாகா ஒருசேனலுக்கு அளித்த பேட்டியில் “ராகுல் காந்தி இரவு பார்ட்டியில் பங்கேற்கிறார். நாடு சிக்கலான சூழலை எதிர்கொண்டிருக்கும்போது, பிரதமர் நாட்டில் இல்லை என்று காங்கிரஸ் கட்சி விமர்சிக்கிறது.

ஆனால், உண்மையில் காங்கிரஸ் கட்சி பிரதமர் மோடி குறித்து விமர்சிக்கவில்லை, ராகுல் காந்தி குறித்துதான் விமர்சிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.