பிரதமர் மோடியின் ஆலோசகராக முன்னாள் உயர்கல்வித்துறை செயலாளர் நியமனம்..!

பிரதமர் மோடியின் ஆலோசகராக தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை முன்னாள் செயலாளரும், உயர்கல்வித்துறையில் செயலாளராக இருந்த அமித் காரே நியமிக்கப்பட்டுள்ளார்.


அடுத்த 2 ஆண்டுகளுக்கு அல்லது மறு உத்தரவு வரும்வரை இதில் எது முதலில் வருகிறதோ அதுவரை அமித் காரே பதவியில் இருப்பார்.


கடந்த 1985-ம் ஆண்டு பிஹார்-ஜார்கண்ட் கேடர் ஐஏஎஸ் அதிகாரியான அமித் காரே, உயர்கல்வி்த்துறை செயலாளராக இருந்து கடந்த மாதம் 20-ம் தேதிதான் ஓய்வு பெற்றார். அதன்பின் அவர் பிரதமரின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.


மத்திய அரசு வெளியி்ட்ட அரசாணையில் “1985-ம் ஆண்டு கேடர் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அமித் காரே, பிரதமரின் ஆலோசகராக நியமிக்க அமைச்சரவையின் நியமனக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அரசின் செயலாலர் அந்தஸ்தில் பதவியில் இருக்கும் அமித் காரே 2 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மத்திய அரசின் புதிய தேசியக் கல்விக் கொள்கையை பிரதமர் மோடியின் ஆலோசனையின் படி கண்காணித்து உருவாக்கியவரும் அமித் காரேதான்.

அதுமட்டுமல்லாமல் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறையிலும், டிஜிட்டல் ஊடகத்திலும் பல்வேறு சீர்திருத்தங்களை, விதிகளையும் புகுத்தியவரும் அமித்காரேஎன்பது குறிப்பிடத்தக்கது.


பிரதமர் மோடியின் ஆலோசகர்களாகஇதற்கு முன் அமைச்சரவைச் செயலாளர் பி.கே. சின்ஹா, முன்னாள் செயலாளர் அமர்ஜித் சின்ஹா ஆகியோர் இருந்து ஓய்வு பெற்றனர்.

முடிவுகள் எடுப்பதில் வெளிப்படைத்தன்மையுடன் இருக்கும் அமித் காரே, பிரதமர் மோடியின் கீழ் பணியாற்றிய செயலாளர்களில் இவரும் ஒருவர்.


கடந்த 2019ம் ஆண்டு டிசம்பரில் உயர் கல்வித்துறை செயலாளராக அமித் காரே நியமிக்கப்பட்டார்.அதன்பின் புதிய கல்விக்கொள்கை வடிவமைப்பு தீவிரமடைந்து, 2020 ஜூலை மாதம் 29-ம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.