22 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் கமல் – பிரபுதேவா

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ள படம் ‘விக்ரம்’. ‘மாஸ்டர்’ படம் வெளியீட்டுக்குப் பிறகு இப்படத்தில் வேலைகளை லோகேஷ் கனகராஜ் தொடங்கவுள்ளார். இப்படத்தில் கமலுடன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள நடிகர் ஃபஹத் ஃபாஸிலை படக்குழுவினர் அணுகியுள்ளனர். ஆனால் தேதிகள் ஒத்துவராததால் ஃபஹத் பாசில் இப்படத்தில் நடிக்கவில்லை என்று கூறப்பட்டது.

இந்நிலையில் ‘விக்ரம்’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பிரபு தேவாவிடம் படக்குழுவினர் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் பிரபு தேவா தரப்பிலிருந்தோ கமல் தரப்பிலிருந்தோ இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.

1998ஆம் ஆண்டு சிங்கீதாம் சீனிவாச ராவ் இயக்கத்தில் வெளியான ‘காதலா காதலா’ திரைப்படத்தில் கமல் – பிரபுதேவா இணைந்து நடித்திருந்தனர். இப்படத்தின் நகைச்சுவை காட்சிகள் காலம் கடந்து இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுபவை.

இந்த சூழலில் தற்போது ‘விக்ரம்’ படத்துக்காக 22 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசன்- பிரபுதேவா மீண்டும் இணைந்து நடிப்பதாக வெளியான தகவல் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கும் அனிருத் இசையமைத்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் டீஸர் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.