ரூ.50 லட்சம் கேட்டு கடத்தல்,மலேசியா தாயிடம் நாடகம் ஆடிய மகன்; போலீசார் எச்சரித்து அனுப்பினர்

சென்னை, அமைந்தக்கரையில் இருந்து மலேசியாவில் உள்ள தாயிடம் தன்னை கடத்தி ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டுவதாக நாடகம் ஆடிய மகனை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

சென்னை அமைந்தகரை, மேத்தா நகர் திருவள்ளுவர் தெருவில் வசிப்பவர்  இம்ரான் (25). இவர் தாய் சுலேகா, மலேசியாவில் உள்ளார். இம்ரான் அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் இம்ரான், தன் தாய் சுலேகாவிற்கு போன் செய்தார். அதில் தான் வீட்டில் இருந்த போது அங்கு 4 பேர் வந்து கடத்தி சென்றனர். ரூ.50 லட்சம் பணம் கேட்டு மிரட்டுகின்றனர் என்றார்.  ஆனால் இம்ரான் நண்பர்களை வைத்தும் பேசி உள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சுலோகா, சென்னை பெருநகர காவல்துறை ஆணையரிடம் ஆன்லைன் மூலமாக புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். இது தொடர்பாக அமைந்தகரை போலீசார் உடனே விசாரணையை தொடங்கினர். விசாரணையில், அந்த கடத்தல் கும்பல், மிரட்டல் விடுத்த செல்போன்  சிக்னல் மேத்தா நகர் பகுதியையே காட்டியுள்ளது.  இதையறிந்த இம்ரான், தாய் சுலேகாவிற்கு போன் செய்து தன்னை யாரும் கடத்தவில்லை, கடன் மற்றும் ஓட்டல் தொழில் தொடங்க பணம் தேவைப்பட்டன, அதனால் கடத்தல் நாடகம் ஆடினேன் என்றார். இதையடுத்து இம்ரானை காவல் நிலையம் வரவழைத்த போலீஸார் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.