உணவு டெலிவிரி ஊழியர்களிடம், நூதன முறையில், பணம் பறிப்பு..! சைபர் கிரைம் திருடனை தப்ப விட்ட போலீஸ்

சென்னை, மதுரவாயல் பகுதியில் உணவு டெலிவிரி ஊழியர்களை விரட்டிப்பிடித்து, நூதன முறையில் பணம் பறித்த வழக்கில், கையில் சிக்கியும் சைபர் கிரைம் திருடனை கைது செய்யாமல், போலீசார் வழி அனுப்பி வைத்தனர்.

சென்னை, கோயம்பேடு, மதுரவாயல் ஆகிய பகுதிகளில், தனியார் உணவு டெலிவிரி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.

இங்கு, ஊழியர்கள் பலர் வேலை பார்க்கின்றனர். சில நாட்களாக, மர்ம நபர் ஒருவர், இந்த ஊழியர்களை விரட்டி சென்று, நூதன முறையில் பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

அந்த ஊழியர்களிடம், தங்கள் நிறுவனத்தில் தரும் பெட்ரோல் அலவன்ஸ் தொகை, 2 ஆயிரம் ரூபாயை முன்னதாக வாங்கி தரும் வேலை செய்து வருவதாக, அந்த நபர் தெரிவித்தார்.

அதை நம்பிய சில ஊழியர்களிடம், ரிங் ஆப் மூலம் அவர்களின் மொபைல்போனில், பணம் பெற்று தந்தார். அதற்கு கமிஷன் தொகையாக ஆயிரம் ரூபாய் வாங்கிக்கொண்டு சென்றார்.

அவர், அங்கிருந்து சென்ற சிறிது நேரத்தில், இவர்களின் மொபைல் போனில், குறுஞ்செய்தி ஒன்று வந்தது.

அதில், 2 ஆயிரம் , ரிங் ஆப் மூலம் கடன் வாங்கியதாக இருந்தது.  ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அந்த நபரை தேடி இருந்த நிலையில், அதைபோன்று, வேறொரு ஊழியரிடம் மோசடி செய்யும் போது கையும், களவுமாக சிக்கினார். அவருக்கு தர்ம அடி கொடுத்து, விசாரித்ததில், அவர், பெரம்பூர் பகுதியை சேர்ந்த கார்த்தி (24) என தெரிந்தது.

அவரை, மதுரவாயல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார், சம்பவம் நடந்த இடம் , தங்களின் எல்லைக்குள் வராது என்றனர்.

பின், கோயம்பேடு காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு எதுவும் விசாரிக்காமல், கார்த்தியின் வீட்டு முகவரியை மட்டும் வாங்கிக்கொண்டு, அவரை வழி அனுப்பி வைத்தனர்.

கையில் சிக்கியும், சைபர் கிரைம் திருடனை போலீசார் கண்டுக்கொள்ளாமல் வழி அனுப்பியதை நினைத்து, உணவு டெலிவிரி ஊழியர்கள் மேலும் அதிர்ச்சியடைந்தனர்.