போலீஸ் இன்பார்மருக்கு வெட்டு அண்ணாசாலையில் துரத்தி சென்ற கும்பல்

போதை பொருள் விற்பது குறித்து, போலீசாருக்கு தகவல் கூறிய இன்பார்மபரை கத்தியால் வெட்டி, கொல்வதற்கு, அண்ணாசாலையில் துரத்தி சென்ற கும்பலை கைது செய்தனர்.
சென்னை, திருவல்லிக்கேணி, காந்தி நகர், பல்லவன் சாலையை சேர்ந்தவர் வெங்கடேஷ்(35), இவர் ஆட்டோ ஓட்டுநர்.
போலீசுக்கு இன்பார்மர் ஆகவும் இருந்தார். நேற்று தீவுத்திடல் அருகே நின்றிருந்தார்.
அப்போது அங்கு வந்த நான்கு பேர், வெங்கடேஷை வழிமறித்து தகராறில் ஈடுபட்டு, கத்தியால் வெட்டினர்.
அவர் அங்கிருந்து சுதாரித்து ஓடினார். ஆனால், அந்த நபர்கள் விடாமல் துரத்தி சென்று கொல்ல முயற்சித்தனர்.
வெங்கடேசன் தப்பி சென்று, திருவல்லிக்கேணி போலீசில் புகார் அளித்தார். புகாரின்படி போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி நேற்று நான்கு பேரை கைது செய்தனர்.
அதில் அவர்கள், திருவல்லிக்கேணி, காந்தி நகரை சேர்ந்த லோகேஷ்(19), சிந்தாதிரிப்பேட்டை, நெடுஞ்செழியன் காலனியை சேர்ந்த ஜேக்கப் (23), பஜார் தெருவை சேர்ந்த தனுஷ்(18) மற்றும் 17 வயது சிறுவன் என தெரிந்தது.
இவர்கள் மீது கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்குகள் உள்ளன. கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் விசாரணையில், பல்லவன் சாலை, காந்தி நகர் பகுதியில், கஞ்சா மற்றும் மதுபானம் ஆகியவை சட்டவிரோதமாக விற்கப்படுகிறது.
இது குறித்த தகவலை வெங்கடேஷ், போலீசாருக்கு ரகசிய தகவல் கொடுத்துள்ளார். இதை தெரிந்துக்கொண்ட நால்வரும், அவரை கொல்ல முயற்சித்தது தெரிந்தது.