பிரபல பின்னணி பாடகர் கேகே மாரடைப்பால் காலமானார்: விஜய், சிம்பு, சூர்யா படங்களில் பாடியவர்

பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் கொல்கத்தாவில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றபின், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.

திரையுலகில் கேகே என்று மரியாதையாக அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத்துக்கு வயது 53. கொல்கத்தாவில் உள்ள நஸ்ருல் மன்சா அரங்கில் நடந்த ஒரு கல்லூரி விழாவில் பங்கேற்று முடித்தபின், தான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு கேகே திரும்பினார்.

அப்போதுஅவருக்கு உடல்நலம் திடீரென பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, உடனடியாக அவரை கொல்கத்தாவில் உள்ள சிம்ஆர்ஐ மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

கிருஷ்ணகுமார் குன்னத் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றாலும், டெல்லியில் பிறந்து வளர்ந்தவர்.

இதனால் இந்தி, தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பாடல்களைப் பாடியுள்ளார்.

திரைத்துறைக்கு வரும்முன் கேகே பாடிய பல்வேறு ஜிங்கில்கள் கடந்த 1990களில் இளைஞர்களிடையே மிகப்பிரபலமாக இருந்தது. குறிப்பாக “பல்” மற்றும் “யாரோன்” பாடல்கள் பள்ளி மற்றும் கல்லூரி நாட்களிலும், பிரியாவிடை நிகழ்ச்சிகளிலும் அதிகமாகப் பாடப்பட்டன.

2000ம் ஆண்டு தொடக்கத்தில் பின்னணி பாடகராக பாலிவுட்டில் அறிமுகமாகி, தமிழ், மலையாளம்,தெலங்கு, கன்னடம், மராத்தி, வங்காளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் கேகே பாடல்களைப் பாடியுள்ளார்.

தமிழில் குறிப்பாக நடிகர் விஜய் நடித்த கில்லி படத்தில் அப்படிப்போடு பாடல், செல்லமே படத்தில் காதலிக்கும் ஆசை, 7ஜி ரெயின்போ காலனியில் நினைத்து நினைத்து பாடல், காக்க காக்க படத்தில் உயிரின் உயிரே, மின்சாரக் கனவு திரைப்படம் என தமிழில் 50க்கும் மேற்பட்ட பாடல்களை கேகே பாடியுள்ளார்.

கேக தனது இணையதளத்தில் பதிவிட்ட கருத்தில் “மேடையில் ஏறிவிட்டாலே கலைஞர்களுக்கு புதுவிதமான உற்சாகம் வந்துவிடும். எந்ந நிலையில் அவர் இருந்தாலும் கவலையில்லை.

நான் மேடையில் இருந்தால், நான் அனைத்தையும் மறந்துவிட்டு பாடல் மட்டும்பாடுவேன்” எனத் தெரிவித்துள்ளார்.

பாடகர் கேகே மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “பிரபல பாடகர் கேகே என்ற கிருஷ்ணகுமார் குன்னத் திடீர் மறைவு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அனைத்துதரப்பு வயது மக்களையும் இவரின் பாடல்கள் வசீகரித்துள்ளன. அவரின் பாடல் வழியாக எப்போதும் இவரை நினைத்திருப்போம்.

கேகேவின் ரசிகர்கள், குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் அக்ஸய் குமார் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “கேகேவின் திடீர் மறைவு செய்தி கேட்டு நான் உண்மையிலேயே அதிர்ச்சி அடைந்தேன். பெரிய இழப்பு. ஓம் சாந்தி” எனத் தெரிவித்துள்ளார்.