நாளை நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர்: பல்வேறு கட்சித் தலைவர்களுடன் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் இன்று ஆலோசனை..!

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நாளை தொடங்குவதையடுத்து, அனைத்து அரசியல்கட்சியின் அவைத் தலைவர்களுக்கும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி இன்று அழைப்பு விடுத்துள்ளார்.


நாளை தொடங்கும் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் இன்று காலை 9.30 மணி அளவில் மத்திய அமைச்சர் ஆலோசனை நடத்துகிறார்.


நாளை தொடங்கும் இந்தக் குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 23ம் தேதிவரை நடக்க உள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 26 மசோதாக்களை நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளது.


இதில் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதற்கான மசோதாவாகும். முதலில் இந்த மசோதாக்களை திரும்ப் பெற மத்திய அரசு முன்னுரிமைஅளிக்கும் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

அதன்பின் கிரிப்டோகரன்ஸி மற்றும் டிஜிட்டல் கரன்ஸியை ஒழுங்குபடுத்தும் மசோதாவை மத்திய அரசு நிறைவேற்ற உள்ளது.
இது தவிர அனைத்துக்க ட்சிக் கூட்டமும் இன்று நடக்கிறது.

மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்யநாயுடுவும், அனைத்து கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த இன்று அழைப்பு விடுத்துள்ளார்.


நாளை தொடங்கும் கூட்டத்தொடரில் அனைத்து எம்.பி.க்களும் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் கண்டிப்பாகப் பங்கேற்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் கொறாடா உத்தரவிட்டுள்ளார்.

அதேபோல மாநிலங்களவை எம்.பி.க்களும் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என பாஜக கொறடாவும் உத்தரவிட்டுள்ளார்.
இது தவிர நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் அனைத்து விவகாரங்களிலும் ஒற்றுமையாக இருக்க வேண்டும், கருத்தொற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், காங்கிரஸ் மக்களவை எதிர்க்கட்சித்த லைவர் மல்லிகார்ஜூன கார்கே நாளை எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை நடத்த அழைப்புவிடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.