இனி.. ஒவ்வொரு மாதமும் விருது: ஐசிசி புதிய திட்டம்

ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர்களுக்கான விருதை வழங்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) திட்டமிட்டுள்ளது. ஜனவரி மாதத்துக்கான விருதுக்கு ரிஷப்பந்த், ரவிச்சந்திர அஸ்வின் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.

உலகளவில் ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் வீரர்,வீராங்கனைகளை மாதந்தோறும் கவுரவிக்க ஐசிசி திட்டமிட்டுள்ளது. இதன்படி, ஆன்-லைனில் நடத்தப்படும் வாக்கெடுப்பின் மூலம் ரசிகர்களும் பங்கேற்று சிறந்த வீரர்களுக்கு வாக்களிக்கலாம்.

இதுதவிர முன்னாள் வீரர்கள், வர்ணனையாளர்கள், பத்திரிகையாளர்களும் பங்கேற்று மாதந்தோறும் சிறந்த வீரர்களைத் தேர்வு செய்வார்கள். அவர்களுக்கு சிறந்த வீரருக்கான விருதை ஐசிசி வழங்கும்.

ஜனவரி மாதத்துக்கான விருதுக்கான பட்டியலில் ரவிச்சந்திர அஸ்வின், ரிஷப் பந்த், முகமது சிராஜ், டி நடராஜன் ஆகியோர் விருதுக்கான போட்டிக் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றபின் இந்த வீரர்களுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

ஜனவரி மாதத்துக்கான மற்ற நாட்டு வீரர்களில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட், ஆஸி. பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித், ஆப்கானிஸ்தான் வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ், தென் ஆப்பிரி்க்காவின் மரிஜானே காப், நாதின் டி கிளார்க், பாகிஸ்தான் வீரர் நிடா தார் ஆகியோர் களத்தில் உள்ளனர்.

சிறந்த வீரருக்கான விருது ஒவ்வொரு மாதமும் 2-வது திங்கள்கிழமை அறிவிக்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது.