பரிதாபத்தில் பாகிஸ்தான் பொருளாதாரம்! கரன்சி மதிப்பு ரூ.262ஆக வீழ்ச்சி: அந்நியச் செலாவணி மோசமான சரிவு

பாகிஸ்தானின் கரன்சி மதிப்பு இதுவரை இல்லாத வகையில் அமெரிக்க டாலருக்கு எதிராக ரூ.262.60ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது.

பாகிஸ்தானின் அந்நியச் செலாவணிச் சந்தையில் நேற்று வர்த்தக நேரத்தில் வெளிச்சந்தையில் ரூ.265 ாகச் சரிந்து, வங்கிகளுக்கு இடையிலான பரிமாற்றத்தில் ரூ.266ஆகக் குறைந்தது. இறுதியில் ரூ.262க்கு முடிந்தது.

பாகிஸ்தான் ஸ்டேட் வங்கியின் அறிவிப்பின்படி, “ பாகிஸ்தான் கரன்சி மதிப்பு வியாழக்கிழமை மதிப்பில் இருந்து டாலருக்கு எதிராக ரூ.7.17 அல்லது 2.73 சதவீதம் சரிந்தது.

வங்கிகளுக்கு இடையிலான பரிமாற்றத்தில், வெள்ளிக்கிழமை மட்டும் டாலருக்கு எதிராக ரூ.34 வீழ்ச்சி அடைந்தது” எனத் தெரிவித்தது.

கடந்த 1999ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பரிமாற்றமுறைக்குப்பின் கரன்சி மதிப்பு மோசமாகச் சரிந்தது இதுதான் முதல்முறையாகும்.

சர்வதேச செலவாணி நிதியத்திடம் கடன் பெற்று பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து, பல தடைகளை நீக்கியபின் பாகிஸ்தான் கரன்சி மதிப்பு படுமோசமாகச் சரிந்து வருகிறது.

சர்வதேச செலாவணி நிதியத்தின்(IMF) 9வது மதிப்பாய்வை முடிக்க வேண்டும், ஒரு வாரத்திற்குள் டீசல் மற்றும் பெட்ரோல் மீது 17 சதவீத பொது விற்பனை வரி விதிக்க வேண்டும். இரு நிபந்தனைகளையும் பாகிஸ்தான் நிறைவேற்றியுள்ளது.

இதனால், பாகிஸ்தானுக்கு 1200 கோடி அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட உள்ளது, அது மட்டுமல்லாமல் நட்பு நாடுகள் மற்றும் பிற பலதரப்பு கடன் வழங்க வாய்ப்பு கிடைக்கும்.

ஆனால், பாகிஸ்தானின் அந்நியச் செலாவணி படிப்படியாகக் குறைந்து ஆபத்தான கட்டத்தை நெருங்கியுள்ளது. இதனால், அந்நியச் செலாவணி கையிருப்பை உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

தற்போது டாலருக்கு எதிராக கரன்சி மதிப்பும் படுமோசமாக வீழ்ச்சி அடைந்துவிட்டதால், வரும் நாட்களில் இறக்குமதிக்காக அதிகமாக டாலரை வழங்க நேரிடும். அப்போது பாகிஸ்தான் பொருளாதாரம் மோசமான கட்டத்தை நோக்கித் தள்ளப்படும்.

கராச்சி துறைமுகத்தில் மட்டும் 9ஆயிரம் கண்டெய்னர்கள் நிலுவை தொகைக்காக காத்திருக்கின்றன. இந்த கண்டெய்னர்களுக்கு டாலரின் பணம் வழங்கினால் மட்டும்தான் வர்த்தகர்களுக்கு வழங்கப்படும்.

ஆனால் பாகிஸ்தான் அரசிடம்தான் அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்து கொண்டே வருவதால் அதற்கு வழியில்லாமல் இருக்கிறது.

சர்வதேச செலாவணி நிதியம் அடுத்த மாதத்தில் பாகிஸ்தானுக்கு கடன் வழங்கினால்தான் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியில் இருந்து தப்பிக்க முடியும் இல்லாவிட்டால், இலங்கையைப் போன்ற மோசமான நிலைக்குத் தள்ளப்படும்.

பாகிஸ்தான் ஸ்டேட் வங்கியின் அந்நியச் செலாவணி கையிருப்பு 92.30 லட்சம் டாலராகக் குறைந்துவிட்டது. ஏறக்குறைய ஒரு கோடி டாலர் அளவுக்கு கூட பாகிஸ்தானிடம் அந்நியச் செலாவணி கையிருப்பு இல்லை.

பாகிஸ்தான் அரசு தான் பெற்ற வெளிக்கடனுக்கு அதிகமாக வட்டிசெலுத்த வேண்டியிருப்பதால், அதிகமாக டாலரைச் செலவிடுகிறது.

இதனால் டாலர் கையிருப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. வர்த்தக வங்கிகளிடம் அந்நியச் செலாவணி கையிருப்பு 5.77 பில்லியமாகக் குறைந்தவிட்டது.