4 நாளில் தெ.ஆப்பிரிக்காவை முடிச்சுட்டாங்க..பாபர் ஆசம் தலைமையில் முதல் டெஸ்ட் வெற்றி

கராச்சியில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது பாகிஸ்தான் அணி.


முதல் இன்னிங்ஸில் தெ. ஆப்பிரிக்க அணி 220 ரன்களும், பாகிஸ்தான் அணி 378 ரன்கள் சேர்த்து 158 ரன்கள் முன்னிலை பெற்றது. 2-வது இன்னிங்ஸை ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 245ரன்களுக்குள் ஆட்டமிழந்தது.

88 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 22.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாச்தில் வென்றது.


34 வயதில் பாகிஸ்தான் அணியில் சுழற்பந்துவீச்சாளராக அறிமுகமாகிய நுமான் அலி 2-வது இன்னிங்ஸில் 35 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.


பாகிஸ்தான் அணியின் டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்ற பாபர் ஆசமுக்கு முதல் போட்டியே வெற்றியாக அமைந்துள்ளது.


தென்ஆப்பிரிக்காவுடன் 27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பாகிஸ்தான் அணி பெறும் 5-வது வெற்றி இதுவாகும். ஆட்டநாயகனாக முதல் இன்னிங்ஸில் சதம் அடித்த பவாத் ஆலம் தேர்வு செய்யப்பட்டார்.

3-வதுநாளான நேற்றைய ஆட்ட நேரமுடிவில் தென் ஆப்பிரி்க்க அணி தனது 2-வது இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் சேர்த்திருந்தது. டீகாக் ரன் ஏதும் எடுக்காலும், மகராஜா 2 ரன்னிலும் இன்றைய 4-வது நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். டீ காக் 2 ரன்னிலும், மகராஜ் 2 ரன்னிலும் வெளியேறினார்.


7-வது விக்கெட்டுக்கு, பவுமா ஓரளவுக்கு நிலைத்து ஆடி 40 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். லிண்டே 11 ரன்னிலும் ,ரபாடா (1), நார்ட்ஜே(0) என விரைவாக விக்கெட்டை இழந்தனர். தென் ஆப்பிரிக்க அணி 2-வதுஇன்னிங்ஸில் 245 ரன்களுக்கு ஆட்டமிழந்து 87 ரன்கள் இலக்காக பாகிஸ்தானுக்கு நிர்ணயித்தது.


மிகவும் எளிதான இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணி, இம்ரான் பட்(12),அபித் அலி(10) கேப்டன் பாபர் ஆசம்(30) ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
அசார்அலி 31 ரன்னிலும், பவாத் ஆலம் 4 ரன்னிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியைவெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.