பா.ரஞ்சித்தின் அடுத்த பட தலைப்பு இது தான்

ஆர்யா, பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘சார்பட்டா பரம்பரை’ படத்தை இயக்கியுள்ளார் பா.இரஞ்சித். திரையரங்குகள் இன்னும் திறக்கப்படாத காரணத்தால் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. ஜூலை 22-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்துக்குப் பிறகு பா.இரஞ்சித் இயக்கவுள்ள அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. தற்போது ‘சார்பட்டா பரம்பரை’ படத்தை விளம்பரப்படுத்த அளித்த பேட்டியில் தனது அடுத்த படம் குறித்துப் பேசியுள்ளார்.

முழுக்க காதலை மையப்படுத்திய கதையைத் தான் அடுத்ததாக இயக்கவுள்ளார் பா.இரஞ்சித். இந்தப் படத்துக்கு ‘நட்சத்திரம் நகர்கிறது’ எனத் தலைப்பிட்டுள்ளார். இதில் யாரெல்லாம் நடிக்கவுள்ளார்கள் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

பா.இரஞ்சித் இயக்கிய முதல் படமான ‘அட்டகத்தி’ முழுக்க காதலை மையப்படுத்தி, புனித பிம்பத்தைத் தகர்த்து நையாண்டி பாணியில் எடுக்கப்பட்டது. அடுத்ததாக தீவிரமான கதைக் களங்களையே இயக்கி வந்தார். தற்போது மீண்டும் காதலை மையப்படுத்திய படத்தை பா.இரஞ்சித் இயக்கவிருப்பது நினைவு கூரத்தக்கது.