எங்கள் அரசின் புதிய ஆட்சேர்ப்பு முறை நெறிப்படுத்தப்பட்டது, வெளிப்படையானது: பிரதமர் மோடி

எங்கள் அரசின் புதிய ஆட்சி சேர்ப்பு முறை நெறிப்படுத்தப்பட்டது, வெளிப்படையானது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

10 லட்சம் பேருக்கு வேலைவழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்து ரோஜ்கர் மேளா திட்டத்தைக் கொண்டு வந்துள்ளார்.

இதன் படி ஏற்கெனவே நடத்தப்பட்ட ரோஜ்கர் மேளாவில் 71ஆயிரம் பேர் புதிதாக அரசுப்பணியில் சேர்க்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அடுத்தகட்டமாக இன்று 71,426 பேருக்கு புதிதாக பணி ஆணை வழங்கப்பட்டது. மத்திய அரசின் ரயில்வேயில் இளநிலை பொறியாளர், லோகோ பைலட், தொழில்நுட்ப ஊழியர்கள், ஆய்வாளர்கள், துணை ஆய்வாளர்கள், கான்ஸ்டபிள், ஸ்டெனோகிராபர், இளநிலை கணக்காளர், கிராமின் தக் சேவக், வருமானவரி ஆய்வாளர், ஆசிரியர், செவிலியர், மருத்துவர், சமூக பாதுகாப்பு அதிகாரி, பிஏ, எடிஎஸ் உள்ளிட்ட பல்வேறு பணியில் இணைந்தவர்களுக்கு இன்று பணி ஆணைகளை பிரதமர் மோடி காணொலி மூலம் வழங்கி தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் 45 மத்திய அமைச்சர்கள் பல்வேறு நகரங்களில் இருந்தவாறு பணி ஆணையங்களை புதிதாக வேலையில் சேர்ந்தவர்களுக்கு வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொலி வாயிலாகப் பேசியதாவது:

ரோஜ்கர் மேளா என்பது நம்முடைய அரசின் அடையாளமாகியுள்ளது. நாங்கள் கூறியவாக்குறுதியை நிறைவேற்றி வருகிறோம். இத்போன்று ரோஜ்கர் மேளா திட்டத்தை பல மாநிலங்களும் தொடங்க உள்ளன.

புதிதாக பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்று உறுதி ஏற்க வேண்டும்.

வணிகத்தில் நுகர்வோர் எப்போதும் சரியானவர் என்று குறிப்பிடுவது போல், நிர்வாக அமைப்பில் குடிமகன் எப்போதும் சரியானவர் என்பது மந்திரமாக இருக்க வேண்டும்.

இந்த அரசுப்பணிக்கு வந்துள்ளவர்களில் பெரும்பாலானோர் குடும்பத்தில் ஒருவர் கூட அரசுப்பணியில் இல்லாதவர்கள்.

போட்டியில் வெற்றி பெற்றோர், தகுதியானவர்களுக்கு மட்டுமே இந்த வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நிர்வாக முறையில் ஆட்சேர்ப்பு என்பது நெறிப்படுத்தப்பட்டதாகவும், வெளிப்படையாகவும் இருக்கும்.

வேலைவாய்ப்பை அதிகப்படுத்துவதற்காகவும், சுயவேலைவாய்ப்பை உருவாக்கவும் உள்கட்டமைப்புக்கு அதிகமான முதலீடு செலுத்தப்பட்டுள்ளது. வளர்ச்சி வேகமெடுக்கும்போது, சுயவேலைவாய்ப்பும் அதிகரிக்கும்.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.