எதிர்க்கட்சித் துணைத் தலைவரானார் ஓபிஎஸ்: கொறடா எஸ்.பி.வேலுமணி

அதிமுக சட்டப்பேரவை நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓபிஎஸ் தேர்வானார். கொறடாவாக எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றிய திமுக ஆட்சி அமைத்தது. 65 இடங்களைக் கைப்பற்றிய அதிமுக எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது. எதிர்க்கட்சித் தலைவரைத் தேர்வு செய்யும் போது ஓபிஎஸ் – இபிஎஸ் இடையே போட்டி நிலவியது. பின்னர் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.

ஆனாலும் கட்சி கொறடா, சட்டப்பேரவை அதிமுக துணைத் தலைவர் ஆகியோரைத் தேர்வு செய்வதில் இழுபறி நீடித்தது. சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஜூன் 21-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்நிலையில் கொறடா, சட்டப்பேரவை அதிமுக துணைத் தலைவரைத் தேர்ந்தெடுக்க அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது.

இந்நிலையில் இன்று காலை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் கட்சி கொறடா, சட்டப்பேரவை அதிமுக துணைத் தலைவரைத் தேர்வு செய்வது குறித்தும் மற்ற நிர்வாகிகள் தேர்வு குறித்தும் ஆலோசித்து முடிவெடுக்கப்பட்டது.
3 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த கூட்டத்தில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில்

சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓபிஎஸ் தேர்வு செய்யப்பட்டார்.
கட்சிக் கொறடாவாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமனி தேர்வு செய்யப்பட்டார்.
துணைக் கொறடாவாக அரக்கோணம் சட்டப்பேரவை உறுப்பினர் ரவி தேர்வு செய்யப்பட்டார்.
செயலாளராக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தேர்வு செய்யப்பட்டார்.
துணைச் செயலாளராக மனோஜ் பாண்டியன் தேர்வு செய்யப்பட்டார்.
பொருளாளராக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தேர்வு செய்யப்பட்டார்.