தெப்பக்குளம் சுத்தம் செய்யும்போது வழுக்கி விழுந்து ஒருவர் பலி

சென்னை, எழுகிணறு பகுதியில், காசி விஸ்வ நாதர் தெப்பக்குளத்தை சுத்தம் செய்யும்போது வழுக்கி விழுந்து ஒருவர் பலியானார்.

சென்னை, எழுகிணறு, கிருஷ்ணப்பா டேங்க் தெருவில், பிரசித்திபெற்ற காசி விஸ்வநாதர் தெப்பக்குளம் உள்ளது.

இந்த தெப்பக்குளத்தை சுத்தம் செய்யும் பணியில், இன்று மாலை வண்ணாரப்பேட்டை, ஸ்டான்லி நகரை சேர்ந்த நாராயணன்(55), ரவி(43) ஆகியோர் ஈடுபட்டனர்.

தெப்பக்குளத்தை சுத்தம் செய்யும்போது, படித்துறை பாசியில் நாராயணன் வழுக்கி விழுந்தார்.

அதில் அவர் தெப்பக்குளத்தின் நீரில் மூழ்கினார். தகவல் கிடைத்து, கோவிலின் அறங்காவலர் நடராஜன் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்துக்கு வண்ணாரப்பேட்டை தீயணைப்பு துறையினர் விரைந்து வந்தனர்.

தீயணைப்பு அதிகாரி செந்தில் குமார் தலைமையிலான வீரர்கள் குளத்தில் இறங்கி அவரை தேடினர்.

பின் நாராயணன் மூழ்கி இறந்தது தெரிந்தது. இதையடுத்து, எழுகிணறு போலீசார் நாராயணன் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.