ஒலிம்பிக் ஹாக்கி: இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி

டோக்கியோவில் நடந்து வரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஆடவர் ஹாக்கிப் பிரிவில் 41 ஆண்டுகளுக்குப் பின் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

டோக்கியோவில் நேற்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் பிரிட்டன் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது.

கடைசியாக கடந்த 1980-ம் ஆண்டு மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. அதன்பின் 41 ஆண்டுகளுக்குப் பின் இப்போது தான் அரையிறுதிக்கு மன்பிரித் சிங் தலைமையிலான இந்திய அணி முன்னேறியிருக்கிறது. கடந்த 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் பெல்ஜியம் அணியிடம் காலிறுதியில் இந்திய அணி தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியத் தரப்பில் தில்பிரித் சிங் 7-வது நிமிடத்திலும், 16-வது நிமிடத்தில் குர்ஜந்த் சிங்கும், 57-வது நிமிடத்தில் ஹர்திக் சிங்கும் கோல் அடித்தனர். பிரிட்டன் தரப்பில் 45-வது நிமிடத்தில் பிலிப் ரோப்பர் கோல் அடித்தார்.