ஒலிம்பிக் பாட்மிண்டன்: வெண்கலம் வென்று சிந்து புதிய சாதனை

டோக்கியோவில் நடந்து வரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், பாட்மிண்டன் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்துள்ளார்.

தொடர்ந்து இரு ஒலிம்பிக் போட்டிகளில் பாட்மிண்டன் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை எனும் வரலாற்றை சிந்து படைத்துள்ளார். இதற்கு முன் ரியோவில் நடந்த ஒலி  ம்பிக் போட்டியில் வெள்ளி வென்றார் சிந்து என்பது குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பி்க் போட்டியில் இரு பதக்கங்களை வென்ற 2-வது இந்தியர் 26 வயதான சிந்து என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் மல்யுத்த வீரர் சுஷில் குமார் 2008ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலமும், 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கமும் வென்றிருந்தார். அவருக்கு அடுத்தார் போல் சிந்து இரு பதக்கங்களை வென்றுள்ளார்.
வெண்கலப் பதக்கத்துக்கான இன்றைய ஆட்டத்தில் சீன வீராங்கனை ஹி பிங் ஜியாவை எதிர்த்து மோதினார் தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து. இதற்கு முன் 15 முறை சீன வீராங்கனை ஜியாவுடன் மோதியுள்ள சிந்து அதில் 9 முறை தோல்வி அடைந்துள்ளார் என்பதால், இந்தப் போட்டியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது.

52 நிமிடங்கள் பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் சீன வீராங்கனை ஜியாவோ 21-13, 21-15 என்ற செட்களில் தோற்கடித்து வெண்கலப் பதக்கத்தை சிந்து உறுதி செய்தார்.

இந்தப் போட்டியில் முதல் செட்டில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய சிந்து, எதிராளி சீன வீராங்கனை ஹியாவுக்கு எந்த விதமான வாய்ப்பையும் வழங்கவில்லை. இருப்பினும் 6-5 என்ற கணக்கில் சிந்துவுக்கு ஜியாவோ நெருக்கடி அளித்தார். ஆனால், கடந்த காலங்களில் கற்ற பாடத்தை நினைவில் வைத்த சிந்து, தனது இயல்பான ஆட்டத்துக்கு திரும்பி புள்ளிகளை பெறத் தொடங்கினார். விரைவாக சிந்து புள்ளிகளை எடுத்ததால், இருவருக்கும் இடையிலான இடைவெளி 16-11 என்ற கணக்கில் அதிகரித்து சிந்து முன்னிலை பெற்றார். அதன்பின் ஆதிக்கம் செலுத்திய சிந்து, 8 புள்ளிகள் இடைவெளியில் முதல் செட்டை 21-13 என்ற கணக்கில் 24 நிமிடங்களில் கைப்பற்றினார்.

2-வது செட்டிலும் சிந்துவின் வெறித்தனமான ஆட்டமே மேலோங்கி இருந்தது. 5-2 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை பெறத் தொடங்கிய சிந்து, கடைசி வரை சீன வீராங்கனைக்கு வாய்ப்புக் கொடுக்கவி்ல்லை. 11-8, 15-11 என்ற கணக்கில் சிந்து முன்னிலையோடு நகர்ந்தார், சிந்துவின் ஆட்டத்துக்கு முன்னால் சீன வீராங்கனை ஜியாவால் ஈடுகொடுத்து விளையாட முடியவில்லை. தொடர்ந்து 3 புள்ளிகளை பெற்ற சிந்து 21-15 என்ற கணக்கில் 2-வது செட்டையும் வென்றார்.