நான்காவது நாளும் கிடைக்கவில்லை, அடையாறு ஆற்றில் தான் தலை வீசப்பட்டதா..?

தி.மு.க பிரமுகர் கொலை வழக்கில், அவரது தலை நான்காவது  நாள் தேடியும் கிடைக்கவில்லை. அட்டையாற்றில் தான் தலை வீசப்பட்டதா? என போலீசார், தீயணைப்பு படையினர் குழப்பம் அடைந்துள்ளனர்.

சென்னை, மணலி, செல்வ விநாயகர்கோவில் தெருவை சேர்ந்தவர் சக்கரபாணி (65). இவர், திருவொற்றியூர், 7வது வார்டு தி.மு.க பிரதிநிதி. இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், நாகேந்திரன், சற்குணம் ராய் என்ற இரு மகன்களும் உள்ளனர்.

இவர், கடந்த 10ம் தேதி அன்று, வீட்டை விட்டு வெளியில் சென்றவர் மாயமானர். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது தொடர்பாக, மணலி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

போலீசார் அவரை தேடி வந்தனர். கடந்த 13ம் தேதி, சக்கரபாணியின் மொபைல்போன் டவரை வைத்து, போலீசார் தேடியபோது, ராயபுரம் பகுதியை காட்டியது.

இதையடுத்து, ராயபுரம், கிரேஸ் கார்டன், 3வது தெருவில் வசிக்கும் அஸ்லாம் உசேனின் மனைவி தமீம்பானு (40) என்பவரின் வீட்டில் சக்கரபாணியின் மொபைல்போன் டவர் காட்டியதால் அங்கு தனிப்படையினர் விரைந்தனர்.

அங்கு போலீசார் சென்றபோது, கடும் துர்நாற்றம் வீசியது. வீட்டில் தமீம்பானு, அவரது தம்பி வாசிம்பாஷா ஆகியோர் இருந்தனர்.

வீடு முழுவதும் சோதனையிட்டபோது, கழிவறையில் ரத்தக்கறையுடன், சாக்கு மூட்டை கிடந்தது. போலீசார், சாக்கு மூட்டையை பிரித்தபோது, அதில், சக்கரபாணியின் உடலை 8 துண்டுகளாக வெட்டி போட்டு வைத்துள்ளனர்.  

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் உடலை கைப்பற்றி, ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் தலையை அடையாறு கூவம் ஆற்றில் வீசியதும், குடலை காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதியில் வீசியதும் தெரியவந்தது.

கொலை செய்யப்பட்ட சக்கரபாணிக்கும், தமீம் பானுவுக்கும் தகாத உறவுமுறை இருந்ததும், அவர் தொடர்ந்து தொந்தரவு கொடுத்ததால், தம்பி வாசிம் பாஷா உதவியுடன், அவரை கொலை செய்ததும் தெரியவந்தது.

தமீம்பானு, அவரது காதலன் டில்லி பாபு மற்றும் தமீம்பானு  தம்பி வாசிம்பாஷாவை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையில், மேலும் சக்கரபாணியின் தலை கிடைக்காததால் உடல் பாகங்கள் மரபணு சோதனைக்காக ஐதராபாத்துக்கு போலீசார் அனுப்பி உள்ளனர்.

அதில்,  சக்கரபாணியின் உடல் என உறுதி செய்யப்பட்டால், பின்னர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில், அடையாறு கூவம் ஆற்றில் வீசப்பட்ட சக்கரபாணியின் தலையை தீயணைப்பு படை வீரர்கள் உதவியுடன் நேற்று நான்காவது நாளாக தேடினர்.

எம்ஜிஆர், ஜானகி கல்லூரி அருகில் உள்ள ஆற்றில் , தீயணைப்பு வீரர்கள் தேடினர்.  ஆனால் கிடைக்கவில்லை, வெள்ளப்பெருக்கில், தலை அடித்துக்கொண்டு எங்கேயாவது போனதா? அல்லது ஆற்றில் தான் வீசப்பட்டதா என போலீசார் தீயணைப்பு வீரர் குழப்பம் அடைந்துள்ளனர்.

இதனால், வாசிம் பாஷா, டில்லிபாபு ஆகியோரை காவலில் எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி  உள்ளது.