யாரும் தப்பிக்கமுடியாது! சலுகையும் உண்டு! பட்ஜெட்டில் முக்கியஅறிவிப்பு என்னவாக இருக்கும்?

வருமானவரி செலுத்துவதில் இருந்து யாருக்கும் விலக்கு பெற முடியாதவகையில் புதிய தனிநபர் வருமானவரி முறையை வரும் 2023-24 பட்ஜெட்டில் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக பலவிதமான திட்டங்கள் ஆலோசிக்கப்பட்டு, புதிய வருமானவரி முறையில், கூடுதலாக படிநிலைகள் சேர்க்கப்படலாம் மற்றும் வருமானவரி சதவீதங்கள் குறைக்கப்படலாம் எனத் தெரிகிறது.

அதாவது தற்போது 6 விதமான படிநிலைகள் உள்ளன, இது 9 முதல் 10 வித படிநிலைகளாக மாற்றப்படலாம். அவ்வாறு மாற்றப்படும்போது சில குறிப்பிட்ட பிரிவினர் செலுத்தும் வருமானவரி சதவீத அளவு குறையும்.

இது குறித்து ஆங்கில நாளேடு ஒன்றுக்கு மத்திய அரசு அதிகாரி ஒருவர்கூறுகையில் “புதிய வருமானவரி படிநிலைகள்கொண்டு வருவது குறித்து மத்திய அரசு பலகட்ட ஆலோசனைகளையும், ஆழ்ந்த விவாதங்களையும் நடத்திவிட்டது.

திருப்பட்ட, மாற்றிஅமைக்கப்பட்ட புதிய வருமானவரி படிநிலையை வரும் பட்ஜெட்டில் பார்க்கலாம்.

விவாதங்கள் பெரும்பாலும் இரண்டு அம்சங்களைச் சுற்றியே இருந்தன. ஒன்று, ஒரு புதிய வருமான வரி முறை அதிகமாக ஏற்கத்தக்கதாக இருக்கும்போது அதை அப்படியே வைத்திருப்பது.

இரண்டாவதாக, அதிக எண்ணிக்கையிலான தனிநபர்களை வருமானவரிக்குள் கொண்டுவந்து வருவாயை அதிகப்படுத்துவதாகும்” எனத் தெரிவித்தார்.

தற்போது தனிநபர் வருமானவரி முறையில் 6 படிநிலைகள் உள்ளன. அதாவது ரூ.2.50 லட்சம்முதல் ரூ.5லட்சம்வரை 5 சதவீத வரி, அதன்பின் 10 சதவீதம், 15 சதவீதம், 20 சதவீதம் என அதிகரிக்கிறது.

அதாவது ஒவ்வொரு ரூ.2.50 லட்சத்துக்கும் வரி சதவீதம் அதிகரிக்கிறது. இறுதியகா ரூ.15லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு வருமானவரி 30 சதவீதமாக இருக்கிறது.

அதேசமயம், தற்போது வருமானவரி விலக்கு உச்ச வரம்பு தற்போது ரூ.2.50 லட்சமாக இருக்கிறது. இது ரூ.5 லட்சமாக பட்ஜெட்டில் உயர்த்த அதிகமான வாய்ப்புகள் உள்ளன.

மேலும், வீட்டுக்கடனுக்கான வட்டி செலுத்துவதிலும் குறிப்பிட்ட அளவு கழிவு தரப்படலாம், பல்வேறு சலுகைகளை அறிவிக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.