அசிங்கம்! ஒருத்தர் கூடவா இல்லை: ஐசிசி ஒருநாள் அணியில் ஒரு இந்திய வீரர் கூட இடம்பெறவில்லை

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி)அறிவித்த 2021ம்ஆண்டுக்கான ஒருநாள் போட்டிக்கான அணியில் ஒரு இந்திய அணி வீரர் கூட இடம் பெறவில்லை.

ஏற்கெனவே 2021ம் ஆண்டுக்கான டி20 அணிக்கான பட்டியலிலும் ஒரு இந்திய வீரர் கூட இடம் பெறாத நிலையில், ஒருநாள் போட்டியிலும் இதே நிலை நீடிக்கிறது பெரும் அவமானமாகும்.
தனது பணபலத்தால் ஐசிசி அமைப்பையே ஆட்டிவைக்கும் அமைப்பாக பிசிசிஐ இருந்து வருகிறது.

அந்த அமைப்பிலிருந்து வந்த இந்திய அணியில் இருந்து டி20, ஒருநாள் அணியில் ஒரு இந்திய வீரர் கூட இடம் பெறாதது வேதனையாகும்.

2021ம் ஆண்டில் இந்திய வீரர்கள் தரமற்ற கிரிக்கெட்டை விளையாடினார்களா, அல்லது தகுதியான வீரர்கள் அணியில் இல்லையா என்ற கேள்வி எழுகிறது.

டி20 போட்டி மோகம் வந்தபின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஆடுவதை இந்திய அணி குறைத்துக்கொண்டது. கடந்த ஆண்டில் பெரும்பாலும் டி20 போட்டிகளில் மீதே இந்திய அணி அதிக கவனம் செலுத்தியது காரணமாக இருக்கலாம்.

ஐசிசி ஒருநாள் அணிக்கு கேப்டனாக பாகிஸ்தான் வீரர் பாபர் ஆஸம் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார், பக்கர் ஜமான் ப்ளேயிங் லெவனில் இடம் பெற்றுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த வேண்டர் டூசென், ஜானேமென் மலான் இருவர் இடம் பெற்றுள்ளனர். இலங்கை அணியிலிருந்து ஹசரங்காவும், சமீராவும் இடம் பெற்ருள்ளனர். வங்கதேச வீரர்கள் 3 பேர் இடம்பெற்றுள்ளனர்.

பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம் கடந்த ஆண்டு 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 405 ரன்கள் குவித்து 67 சராசரி வைத்திருந்தார். தென் ஆப்பிரி்க்கா, இங்கிலாந்து பயணத்தில் பாபர் ஆஸம் ஆட்டநாயகன் விருது வென்றார்.

அதேபோல பாகிஸ்தான் வீரர் பக்கர் ஜமான் கடந்த ஆண்டு 6 போட்டிகளில் விளையாடி 365 ரன்கள் குவித்தார் இதில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சதம் முக்கியமானதாகும்.

இலங்கை அணியைப் பொறுத்தவரை வனிந்து ஹசரங்கா பந்துவீச்சு, பேட்டிங் இருபிரிவுகளிலும் கடந்த ஆண்டு சிறப்பாகச் செயல்பட்டார். 14 போட்டிகளில் 356 ரன்கள் குவித்த ஹசரங்கா, 12 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஐசிசி ஒருநாள் அணி விவரம்:
பால் ஸ்ட்ரிலிங்(அயர்லாந்து), ஜானேமன் மலான்(தென்ஆப்பிரிக்கா), பாபர் ஆஸம்(பாகிஸ்தான்)பக்கர் ஜமான்(பாகிஸ்தான்), ராசேவேன் டெர் டூசென்(தெ.ஆப்பிரிக்கா), சஹிப் அல்ஹசன்(வங்கதேசம்), முஸ்பிகுர் ரஹிம்(வங்கதேசம்), வனிந்து ஹசரங்கா(இலங்கை), முஸ்தபிசுர் ரஹ்மான்(வங்கதேசம்), சிமி சிங்(அயர்லாந்து), துஷ்மந்த் சமீரா(இலங்கை)