பெட்ரோல், டீசல் தங்கம் மீது புதிய வரிவிதிப்பு: விலை அதிகரிக்குமா?


பெட்ரோல், டீசல், தங்கம், வெள்ளி ஆகியவற்றுக்கும், சில இறக்குமதி செய்யப்படும் வேளாண் பொருட்களுக்கும் புதிய வரியை மத்தியஅரசு பட்ஜெட்டில் விதித்துள்ளது.

வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாச்சு வரி(ஏஐடிசி) வரி என்று புதிய வரி இந்தபட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஒருபுறம் தங்கம், வெள்ளிக்கான இறக்குமதி வரியை குறைத்துவிட்டு, மறுபுறம் வேளாண் கட்டமைப்பு வரியை மத்திய அரசு விதித்துள்ளது.


மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

நாட்டின் வேளாண் துறையை மேம்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம். இதற்காக புதிதாக வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வரி அறிமுகம் செய்யப்படுிகறது. இந்த வரியால் நுகர்வோர்கள் பயன்படுத்தும் பல பொருட்களின் விலை அதிகரிக்காது, அவர்களுக்கு சுமையாகவும் இருக்காது
நம்முடைய விவசாயிகளின் வருமானமும் அதிகரிக்க வேண்டும். இதனால் இந்த புதிய வரிவிதிக்கப்பட்டுகிறது.

இதன்படி பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.2.50 காசு வரியும், டீசல் மீது ரூ.4 வரியும் விதிக்கப்படுகிறது. இந்த வரியால் நுகர்வோருக்கு எந்தவிதமான கூடுதல் சுமையும் இருக்காது.

அதேநேரத்தில் பெட்ரோல்,டீசல் மீதான அடிப்படை சுங்கவரியும், சிறப்பு கூடுதல் சுங்க வரியும் குறைக்கப்பட்டு இருப்பதால், நுகர்வோருக்கு கூடுதல் சுமை இருக்காது” எனத் தெரிவித்தார்.


இறக்குமதி செய்யப்படும் தங்கம், வெள்ளி மீது 2.5 சதவீதம் வேளாண் கட்டமைப்பு வரி புதிதாக விதிக்கப்படும். இறக்குமதி செய்யப்படும் மதுபானங்கள் மீது 100 சதவீதம் வரி, கச்சா பாமாயில் மீது 17.5 சதவீதம் கட்டமைப்பு வரி, நிலக்கரி, லிகனைட் ஆகியவை மீது 1.50 சதவீதம் வரி, உரம், யூரியா ஆகியவை மீது 5 சதவீதம், பருத்தி மீது 5 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. இதனால் இந்த பொருட்களின் விலை வரும்காலத்தில் உயரலாம்.


பெட்ரோல், டீசல் மீது புதியவரி விதிக்கப்பட்டாலும், அடிப்படை சுங்கவரி குறைக்கப்பட்டதால் விலை உயர்வு சுமை நுகர்வோர் மீது இருக்காது எனத் தெரிவித்துள்ளார். இது வரும்நாட்களில்தான் தெரியவரும்.