நெல்லையில் இன்று பயங்கரம்: பள்ளிச்சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பரிதாப பலி

நெல்லை மாநகரத்தில் இன்று, பள்ளிச்சுவர் இடிந்து விழுந்து, மூன்று மாணவர்கள் பரிதாபமாக பலியாகினர்,

நெல்லை மாநகரம், ஸ்ரீபுரம் டவுன் சாலையில், மாநகராட்சி அலுவலகம் உள்ளது. இங்கு, ஆண்கள் மேல் நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர்.

இன்று பள்ளியில் வகுப்புகள் நடந்தன. பிற்பகல் 11 மணியளவில், இடைவேளையின் போது மாணவர்கள் இயற்கை உபாதைகளை கழிக்க சென்றனர். ஒரே நேரத்தில், நிறைய மாணவர்கள் கழிப்பறைக்கு சென்று வந்தனர்.

மாணவர்களின் நெரிசல் அதிகமானது. சில மாணவர்கள், கழிப்பறையின் வெளிப்பகுதி மதில் சுவர் அருகே நின்றிருந்தனர். கழிப்பறைக்குள் இருந்து வெளியில் வந்த மாணவர்கள், அதில் மதில் சுவரை தாங்கியபடி ஓடி வந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக, அந்த மதில் சுவர் பயங்கர சத்தத்துடன் விழுந்தது. அங்கு நின்றிருந்த 8ம் வகுப்பு மாணவன் விஸ்வ ரஞ்சன், 9ம் வகுப்பு மாணவன் அன்பழகன் மற்றும் சஞ்சய், இசக்கி பிரகாஷ், அபுபக்கம் ஆகியோர் இடிபாடுகளுடன் சிக்கிக்கொண்டனர்.

இதையறிந்ததும், மற்றமாணவர்கள் அலறல் சத்தம் கேட்டு, தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் ஓடி வந்தனர். அவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனால் அதற்குள் விஸ்வ ரஞ்சன்,அன்பழகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த மற்ற மாணவர்களை சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு ஒரு மாணவன் இறந்தான், இந்த சம்பவம் காட்டு தீப்போல் பரவி, ஊர் மக்கள் திரண்டனர். நெல்லை போலீஸ் கமிஷனர் செந்தாமரை கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து வந்தனர்.

இதற்கிடையில், மாணவர்கள் ஆத்திரமடைந்து கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டனர். கனமழை காரணமாக மதில் சுவர் ஈரப்பதத்துடன் இருந்ததே இடிந்து விழுந்ததற்கு காரணம் என கூறப்படுகிறது. சில மாணவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.