காமென்வெல்த் விளையாட்டுப் போட்டியிலிருந்து நீரஜ் சோப்ரா விலகல்?

பிரிட்டனில் நடைபெற உள்ள காமென்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இருந்து இந்தியாவின் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா விலகியுள்ளார் என்று இந்திய ஒலிம்பிக் அமைப்புத் தெரிவித்துள்ளது.

காயம் காரணமாக நீரஜ் சோப்ரா இந்த முறை காமென்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில்பங்கேற்கமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தார்.

2018ம் ஆண்டு கோல்ட்கோஸ்ட்டில் நடந்த காமென்வெல்த் போட்டியில் ஈட்டி எறிதலி்ல் தங்கப்பதக்கம் வென்று நடப்பு சாம்பியனாக நீரஜ் சோப்ரா உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு ட்விட்டரில் பதவிட்ட செய்தியில் “நம்முடைய ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா, பிர்மிங்காமில் நடக்கும் காமென்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கமாட்டார்.

அவருக்கு உடற்தகுதி பிரச்சினை இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அவர் உடல்நிலை விரைவாக குணமடையவும், சவாலான நேரத்தில் அவருக்கு ஆதரவாகவும்இருப்போம்” எனத் தெரிவித்துள்ளது.

உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு தொடைப்பகுதியில் தசைப்படிப்பு ஏற்பட்டது.

அதனால், அவருக்கு ஏற்பட்டுள்ள காயத்தின் தீவிரத்தைப் பொறுத்து அவர் காமென்வெல்த் விளையாட்டில் பங்கேற்குபது குறித்து முடிவு எடுக்கப்படும் என அப்போது தெரிவிக்கப்பட்டது.

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தடகளத்தில் பதக்கம் வென்ற 2வது இந்தியர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றார்.

கடந்த 2003ம் ஆண்டு தடகளத்தில் அஞ்சு பாபி ஜார்ஜ் பதக்கம் வென்றிருந்தார். அதன்பின் தற்போது 88.13 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து நீரஜ் சோப்ரா வெள்ளி வென்றார்.

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச்செயலாளர் ராஜீவ் மேத்தா ஆங்கில நாளேடான தி இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அளித்த பேட்டியில் “நீரஜ் சோப்ராவுக்கு காயம் ஏற்பட்டபின் அவருக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்துப் பார்க்கப்பட்டது.

மருத்துவர்கள் நீரஜ் சோப்ராவுக்கு ஒருமாதம் ஓய்வு தேவை எனத் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, இந்திய தடகள அமைப்புக்கு இன்று காலை தொடர்பு கொண்டு, நீரஜ் சோப்ரா 100 சதவீதம் உடற்தகுதியுடன் இல்லை.

அவருக்கு தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டிருப்பதால், ஒரு மாதம் ஓய்வில் இருக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஆதலால் காமென்வெல்த் போட்டியில் நீரஜ் பங்கேற்கமுடியாது எனத் தெரிவித்தேன்.