இனி, நரேந்திர மோடி மைதானம்….மொட்டீரா கிரிக்கெட் மைதானத்தின் பெயர் மாற்றம்

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானம்

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக இருக்கும், அகமதாபாத்தில் உள்ள மொட்டீரா கிரிக்கெட் மைதானத்துக்கு பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

குஜராத்தில் புனரமைக்கப்பட்டுள்ள மொட்டீரா கிரிக்கெட் மைதானம் உலகிலேயே மிகப்பெரிய மைதானமாகும். ஏறக்குறைய 1.10 லட்சம் ரசிகர்கள் அமரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 3 சிறிய பயிற்சி மைதானங்கள், வெளியே 2 மைதானங்கள், நீச்சல் குளம், வீரர்களுக்கு தங்கும் அறை என பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. 3 ஆயிரம் கார்கள், 10 ஆயிரம் இரு சக்கரவாகனங்கள் நிறுத்த முடியும்.

நரேந்திர மோடி மைதானத்தை திறந்து வைத்த குடியுரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

இந்த மொட்டீரா மைதானம் கடந்த 1982-ம் ஆண்டு கட்டப்பட்டது. உண்மையில் இந்த மைதானத்துக்கு சர்தார் வல்லபாய் படேல் மைதானம் என பெயர் சூட்டப்பட்டது. கடந்த 1984-85-ம் ஆண்டில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி இங்கு நடந்தது. இந்த மைதானத்தில் தான் சுனில் கவாஸ்கர் தனது 10 ஆயிரமாவது ரன்னை அடித்தார், கபில்தேவ் டெஸ்ட் போட்டியில் 432-வது விக்கெட்டை இங்கு தான் வீழ்த்தினார்.

இந்நிலையில் கடந்த 7 ஆண்டுகளாக இந்த மைதானம் புனரமைக்கப்பட்டு பல்வேறு சீரமைப்புப்பணிகள் நடந்தன. 2017-ம் ஆண்டு ஜனவரி 16-ம் தேதி இந்த மைதானத்தை புனரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு ரூ.700 கோடி மதிப்பில் சீரமைக்கப்பட்டு 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பணிகள் முடிந்தன.

இந்த மைதானத்தில் பணிகள் முடிக்கப்பட்டு, இன்று இங்கிலாந்து, இந்திய அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி நடக்கிறது.

அதற்கு முன்னதாக நடந்த விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முறைப்படி இந்த மைதானத்தை திறந்து வைத்தார். இந்த மைதானத்தின் பெயர் நரேந்திர மோடி மைதானம் என மாற்றப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் பங்கேற்றனர்.