பரஸ்பர ஒத்துழைப்புதான் உலகம் கொரோனாவிலிருந்து விரைவாக மீள உதவியது: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே பரஸ்பர ஒத்துழைப்புதான் உலகம் கொரோனா பாதிப்பிலிருந்து விரைவாக மீள்வதற்கு உதவியது என்று பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பெருமித்ததோடு தெரிவித்தார்.

பிரிக்ஸ் (BRICS) என்று பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளின் கூட்டாகும்.

சீனாவில் 14-வது பிரிக்ஸ் மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டை சீனா நடத்துகிறது.

பிரதமர் மோடி நேரடியாகச் செல்ல முடியாததால், காணொலி வாயிலாக பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்றார். பிரிக்ஸ் மாநாட்டில் பிரேசில், ரஷ்யா, சீனா, தென் ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த மாநாட்டில் காணொலி வாயிலாகப் பங்கேற்றுள்ள பிரதமர் மோடி பேசுகையில் “கடந்த சில ஆண்டுகளாக கட்டமைப்பு மாற்றங்களை பிரிக்ஸ் நாடுகள் செய்து வருகறோம்.

இந்த பிரிக்ஸ் நாடுகளின் தாக்கமும் உலகளவில் அதிகரித்து வருகிறது. பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே பரஸ்பர ஒத்துழைப்பு அதிகரிக்கும் போது, அதன் பலனை நாடுகளின் மக்கள் அனுபவிப்பார்கள்.

சர்வதேச பொருளாதாரத்தை நிர்வகிப்பதில் பிரிக்ஸ் நாடுகளின் உறுப்பினர்களுக்கு இடையே ஒருமித்த கருத்து நிலவுகிறது.

நம்முடைய பரஸ்பர ஒத்துழைப்புதான், உலகம் விரைவாக கொரோனா தொற்றிலிருந்து மீள்வதற்கு உதவியது, பங்களிப்பு செய்தது.

நம்முடைய உறவுகள் மேலும் வலுவடைதற்கு தேவையான ஆலோசனைகளை இந்த மாநாட்டில் வழங்குவோம் என்றுநம்புகிறேன்.

பல்வேறு துறைகளில் பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பு இருப்பது மக்களுக்கு பயன் அளிக்கிறது.

பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையிலான இளைஞர்கள், பிரிக்ஸ் விளையாட்டு, சிவில் அமைப்புகள், ஆகியவற்றுக்கு இடையே தொடர்பு அதிகரி்த்துள்ளது.

பிரிக்ஸ் நாடுகளின் மக்களுக்கு இடையேயான தொடர்பு வலுவடைந்துள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

சீன அதிபர் ஜி ஜின்பிங் பேசுகையில் “உக்ரைன் ரஷ்யா போர் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் தன்னிச்சையாக பொருளாதாரத் தடை விதித்துள்ளன.

இன்னும் பனிப்போர் மனநிலையில் அணுகுவதைத் தவிர்க்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியா, சீனா ராணுவ வீரர்களுக்கு இடையே எல்லையில் நடந்த மோதலுக்குப்பின் இதுவரை பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் நேரடியாகச் சந்தி்த்துப் பேசவில்லை.

பிரிக்ஸ், எஸ்சிஓ, ஜி-20 மாநாடுகளில் இரு தலைவர்களும் பங்கேற்றபோதிலும்கூட சந்தித்துக்கொள்ளவில்லை.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் பேசுகையில் “ அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் நிதிசார்ந்த செயல்முறையை எதிர்நாடுகளுக்கு எதிராகப் பயன்படுத்துகிறார்கள்.

பொருளாதாரக் கொள்கையில் இருக்கும் தங்களின் சொந்தத் தவறுகளை உலகின் மீது சுமத்துகிறார்கள்.

நேர்மையான, நன்மைவிளைவிக்கும் கூட்டுறவின் மூலம் சிக்கலான சூழலை எதிர்கொண்டு தீர்க்க முடியும்” எனத் தெரிவித்தார்.