மனிதநேயம் முக்கியம் : பிரதமர் மோடிக்கு மிசோரம் முதல்வர் கடிதம்

மிசோரம் முதல்வர் சோரம் தங்கா


மிசோரம் மாநிலத்தில் தஞ்சம் அடைந்துள்ள மியான்மர் போலீஸார் உள்ளிட்ட அரசியல் தலைவர்களை திருப்பி அனுப்ப முடியாது என்று பிரதமர் மோடிக்கு இம்மாநில முதல்வர் சோரம்தங்கா கடிதம் எழுதியுள்ளார்.

மிசோரம் மாநிலத்தில் ஆட்சியில் உள்ள முதல்வர் சோரம்தங்கா தலைமையிலான மிசோரம் தேசிய முன்னணி பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மியான்மரில் நடந்து வரும் ராணுவப் புரட்சியை எதிர்த்து அந்நாட்டு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் மீது ராணுவம் நடத்தி வரும் துப்பாக்கிச்சூட்டில் இது வரையில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

மியான்மரைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட போலீசார், அரசியல் தலைவர்கள் ராணுவ ஆட்சிக்கு பயந்து வடகிழக்கு மாநிலங்களுக்கு தப்பி வந்துள்ளனர். இவர்களில் பலர், மிசோரம் மாநிலத்தில் உள்ள ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் வடகிழக்கு மாநிலங்கள் யாரும் மியான்மரிலிருந்து வந்துள்ளவர்களுக்கு அடைக்கலம் வழக்கம் கூடாது. அவர்களை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும் என மிசோரம், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர் மற்றும் நாகலாந்து மாநிலங்களுக்கு மத்திய வெளியுறத்துறை கடிதம் எழுதி இருந்தது.

இந்நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கடிதத்துக்கு மறுப்புத் தெரிவித்து, பிரதமர் மோடிக்கு மிசோரம் முதல்வர் சோரம்தங்கா கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், அண்டை நாடுகளில் இருந்து அகதிகளாக வந்தவர்களை மனிதநேயத்துடன் அணுக வேண்டும்.

எனவே, மியான்மரில் இருந்து வந்தவர்களை திருப்பி அனுப்பக் கூடாது. இது தொடர்பாக, வெளியுறவு அமைச்சகம் எழுதியுள்ள கடிதம் எங்களுக்கு ஏற்புடையதாக தெரியவில்லை. மியான்மர் அகதிகளுக்கு தஞ்சம் அளிப்பது பற்றி விரைவாக முடிவு எடுக்க வேண்டும்,’ என்று கூறியுள்ளார்.