வங்கி அதிகாரி போல் பேசி ரூ.50 ஆயிரம் சுருட்டிய ஆசாமி கைது; தமிழகம் முழுவதும் கைவரிசை

சென்னை, கொருக்குப்பேட்டை பகுதியில், வங்கி மேனேஜர் போல் பேசி நகை வியாபாரியிடம் ரூ.50 ஆயிரம் மோசடி செய்த ஆசாமி கைது செய்யப்பட்டார். இவர் தமிழகம் முழுவதும் இதை ஸ்டைலில் பணத்தை  அபேஸ் செய்தது தெரிய வந்தது.

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையை சேர்ந்தவர் கவுதம் சோப்டா, இவரின் மகன் வினோத்  சோப்டா (44) ஆவார். இவர் அதே பகுதியில் நகை கடை வைத்துள்ளார். கடந்த 21ம் தேதி அன்று வினோத் செல்போனில் பேசிய நபர் வண்ணாரப்பேட்டையில் உள்ள குறிப்பிட்ட வங்கியின் பெயரை கூறி அதன் மேனேஜர் என தெரிவித்து பழைய நோட்டுகள் மாற்றப்பட்டு, புதிய  ரூபாய்கள் தரப்படுகிரது என கூறினார்.

வினோத்தும் அதை உண்மை என நம்பி கடை ஊழியர் பாபுவிடம், ரூ.50 ஆயிரம் பழையை நோட்டுகளை கொடுத்து அனுப்பினார். வங்கி வாசலில் நின்றிருந்த அந்த ஆசாமி பாபுவின் அடையாளத்தை தெரிந்து வைத்து அவரிடம் இருந்த பணத்தை வாங்கி சென்று வங்கிக்குள் சென்றவர் மாயமானார். இது தொடர்பாக வினோத் கொடுத்த புகாரின் பேரில் கொருக்குப்பேட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தி ஆந்திரா, சித்தூர், பஜனை கோயில் தெருவை சேர்ந்த சீனிவாச அய்யர் மகன் முரளி அய்யர் (57) என்பவரை கைது செய்தனர். இவர் மீது கும்பகோணம், திருப்பூர், வெள்ளைக் கோட்டை, ஆரம்பாக்கம், பள்ளிப்பட்டு, கீழ்பெண்ணத்தூர், மன்னார்குடி ஆகிய மாவட்டங்களில் இதை போன்று வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.