உச்சத்தில் அரசியல் குழப்பம்! மகாராஷ்டிரா சட்டப்பேரவை கலைக்கப்படுகிறதா?

மகாராஷ்டிராவில் ஆளும் சிவேசனா கட்சியின் எம்எல்ஏக்கள் பாஜக பக்கம் சாய்ந்துள்ளதால், மாநிலத்தில் நிலையற்ற தன்மை ஏற்பட்டுள்ளது. இதனால் சட்டப்பேரவை கலைக்கப்படும் சூழலை நோக்கி நகர்கிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் சேர்ந்து மகாவிகாஸ்அகாதி என்ற கூட்டணியை அமைத்து ஆட்சி நடத்தி வருகின்றன.

தேர்தலின்போது பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த சிவசேனா, ஆட்சி அமைப்பதில் ஏற்பட்ட இழுபறி, மோதல்தான் கூட்டணி பிளவுக்கு இட்டுச் சென்றது.

கடந்த 3 ஆண்டுகளாக மகாவிகாஸ் அகாதி கூட்டணி ஆண்டாலும், பாஜக அவர்களை நிம்மதியாக ஆளவிடவில்லை.

எம்எல்ஏக்களை இழுப்பது, அமலாக்கப்பிரிவு, வருமானவரி சோதனை, வழக்குப்பதிவு எனத் தொந்தரவு அளித்துவந்தது.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த மாநிலங்களவை தேர்தலில் 6 இடங்களில் பாஜக 3 இடங்களில் வென்றது.

பாஜகவுக்கு 2 இடங்கள் மட்டுமே வெல்ல வாய்ப்பிருந்தநிலையில் சுயேட்சைகள், பிறகட்சி எம்எல்ஏக்கள் என 23 எம்எல்ஏக்கள் வாக்களித்ததால் வென்றது.

கட்சி மாறி வாக்களித்தவர்களில் 13 பேர் சிவேசனா கட்சி என்பது தெரியவந்தது. இது குறித்து சிவசேனா கட்சி விசாரித்து முடிப்பதற்கு அடுத்த அதிர்ச்சியாக அந்தக் கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே 40எம்எல்ஏக்களுடன் மாயமாகினார்.

குஜராத்தின் சூரத் நகரில் பாஜக அரசின் பாதுகாப்பில் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட 40எம்எல்ஏக்கள் தங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை சிவசேனா கட்சிதலைமை தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை.

இதற்கிடையே சூரத் நகரிலிருந்து ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட சிவேசனா எம்எல்ஏக்கள் 40 பேரும் நேற்று இரவு அசாம்மாநிலம் குவஹாட்டி நகருக்கு சென்றனர்.

அங்கு ஒரு சொகுசு ஹோட்டலில் அவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதனால் சிவேசனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி கவிழுமா அல்லது எம்எல்ஏக்கள் பாஜகவின் பக்கம் சாய்வார்களா என்ற நிலையில்லாத சூழல் ஏற்பட்டது.

இதையடுத்து, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கட்சிகள் தனித்தனியாகவும், கூட்டமாகவும் கடந்த இரு நாட்களாகஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

சிவசேனா எம்எல்ஏ ஏக்நாத் ஷிண்டே கூறுகையில் “எங்கள் கோரிக்கையை சிவசேனா தலைவரிடம் தெரிவித்துவிட்டேன்.

இனி முடிவு எடுப்பது அவர் கையில்இருக்கிறது. பாஜகவுடன் சேர்ந்து சிவசேனா ஆள வேண்டும் என்பது அவர்கள் கோரிக்கை.

அதற்காக பாஜகவின் பக்கம் செல்லமாட்டோம், பால்தாக்ரேவின் வளர்ப்புநாங்கள் என்று தெரிவித்தார்.

288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்ட்ராவில் ஆளும் மகாவிகாஸ் அகாதி கூட்டணிக்கு 152 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

இதில் சிவசேனாவுக்கு 55, தேசியவாத காங்கிரஸுக்கு 53, காங்கிரஸுக்கு 44 உறுப்பினர்கள் உள்ளனர். எதிர்க்கட்சியான பாஜகவுக்கு 106 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

ஆட்சியைத் தக்கவைக்க 144 உறுப்பினர்கள் ஆதரவு தேவை. ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட 30 எம்எல்ஏக்கள் பாஜவுக்கு ஆதரவளித்தால் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அரசு கவிழும் நிலை ஏற்படும்.

இந்நிலையில் சிவசேனா கட்சியின் செய்தித்தொடர்பாளரும், எம்.பியுமான சஞ்சய் ராவத் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “மகாராஷ்டிரா அரசியல் சூழல் செல்லும் போக்கைக் கவனித்தால், சட்டப்பேரவைக் கலைக்கப்படும் வாய்ப்பை நோக்கி நகர்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே இன்று மாலை 5 மணிக்குசிவசேனா கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நடக்கிறது. இந்தக்கூட்டத்தில் முதல்வர் பதவியிலிருந்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே விலகலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், காங்கிரஸ் கட்சி சார்பில் மாகராஷ்டிரா பொறுப்பாளராக வந்துள்ள கமல்நாத் கூறுகையில் “மகாராஷ்டிராவில் ஆட்சி கவிழ்ப்பு நடக்காது.

காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஒற்றுமையாகஇருக்கிறார்கள். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் விற்பனைக்கு அல்ல”எனத் தெரிவித்துள்ளார்.

இதனால் இன்று மாலை நடக்கும் சிவேசனா கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.