மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே மகனுக்கு கொரோனா

ஆதித்யா தாக்கரே
மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்யா தாக்கரே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிராவில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவில் பாதிக்கப்பட்டனர், 58 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் அமராவதி, புனே, யவத்மால், லட்டூர் உள்ளிட்ட மாவட்டங்களில் லாக்டவுன் மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. நாக்பூர் மாவட்டத்தில் லேசான தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் இம்மாதம் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மும்பை நகரில் வெளியே வரும் மக்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேயின் மகனும், சுற்றுலாத்துறை அமைச்சருமான ஆதித்யா தாக்கரே கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து ஆதித்யா தாக்கரே ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ கொரோனா தொடர்பான லேசான அறிகுறிகள் எனக்கு இருக்கின்றன. நான் என்னை பரிசோதித்ததில் எனக்கு கொரோனா இருப்பது தெரிய வந்தது. என்னுடன் தொடர்பில் இருந்த ஒவ்வொருவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள கேட்டுக் கொள்கிறேன். கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றுங்கள் பாதுகாப்பாக இருங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.